×

கயத்தாறு அருகே கிராம மக்கள் வாக்குச்சாவடிக்கு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு

கயத்தாறு, ஏப்.19: கயத்தாறு அருகே உள்ளூர் வாக்குசாவடியில் வாக்களிக்க அனுமதி கோரி கிராம மக்கள் வாக்குச்சாவடிக்கு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.   தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளத்தில் 1,650 வாக்குகள் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் உள்ளூரில் இருந்த ஒரே வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களித்து வந்தனர். பின்னர் நடந்த தேர்தல்களில் வாக்குச்சாவடி இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்று உள்ளூரிலும் மற்றொன்று அருகில் உள்ள மானங்காத்தானிலும் அமைக்கப்பட்டது.  தற்போது ஆத்திகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 600 வாக்காளர்கள் பெயர் மட்டுமே உள்ளது. மற்ற ஆத்திகுளம் வாக்காளர்கள் மானங்காத்தான், அய்யனாரூத்து, கம்மாபட்டி ஊர்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க சென்று வந்தனர். அதுபோல கம்மாபட்டி மக்களும் ஆத்திகுளம், மானங்காத்தான் ஊர்களுக்கு வாக்களிக்க சென்று வந்தனர். இந்த குழப்ப நிலைக்கு மாற்றம் செய்யவும், வாக்காளர்கள் அந்தந்த ஊர்களிலேயே உள்ள வாக்குச்சாவடியில் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு  செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. கோவில்பட்டி ஆர்டிஓவாக கண்ணபிரான் இருந்தபோது கம்மாபட்டியில் ஒரு சிறப்பு முகாம் நடத்தி அதற்கான பணிகள் வேகமாக நடந்தது. ஆனாலும் இதுவரை வாக்குசாவடிகளில் எந்தவித மாற்றமும் இல்லை. புதிதாக சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்கள் பெயர்கள் மட்டுமே கம்மாபட்டி வாக்குச்சாவடியில் சேர்க்கப்பட்டதே தவிர வெளியூர் சென்று வாக்களித்து வரும் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. அதுபோல வெளியூரிலிருந்து கம்மாபட்டி வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படவில்லை.  இந்நிலையில் ஆத்திகுளத்தைச் சேர்ந்த லட்சுமி காந்தன் தலைமையில் பொதுமக்கள் ஆத்திகுளத்தில் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்றனர். தகவலறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசி முடிவெடுக்குமாறு கேட்டுக்கொண்டதின்பேரில் பொதுமக்கள் கலந்து சென்றனர்.

Tags : voter ,Kayattharu ,
× RELATED மக்களவை தேர்தல்: கர்நாடகாவில் 51% வாக்குப்பதிவு