×

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் கோடை வெயிலிலும் வாக்களிக்க ஆர்வம்

திருவண்ணாமலை, ஏப்.19: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில், விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. சுட்டெரித்த கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், நீண்டவரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, உணவு இடைவேளை எதுவும் இல்லாமல், மாலை 6 மணி வரை தொடர்ந்து நடந்தது.
அதையொட்டி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,717 வாக்குச்சாவடிகளும், ஆரணி மக்களவைத் தொகுதியில் 1,756 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 25 வேட்பாளர்களும், ஆரணி மக்களவைத் தொகுதியில் 15 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அதையொட்டி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஆரணி தொகுதியில் தலா ஒரு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.இந்நிலையில், காலை 7 மணிக்கு முன்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதிகபட்சம் 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து, பாதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு, மீண்டும் சீல் வைக்கப்பட்டு, முறையான வாக்குப்பதிவு தொடங்கியது.திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில், வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான 242 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 980 வாக்குச்சாவடிகள் வெப் காமிரா மூலம் ஆன்லைனில் கண்காணிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு தொடங்கியதும் திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை அரசு பள்ளி, டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப்பள்ளி, மலப்பாம்பாடி அரசு பள்ளி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தடைபட்டது.இதுகுறித்து, மண்டல அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெல் நிறுவன பொறியாளர்கள் விரைந்து வந்து, சிறு, சிறு தொழில்நுட்ப பழுதுகளை சரி செய்தனர். மலப்பாம்பாடி வாக்குச்சாவடிக்கு மாற்று இயந்திரம் வழங்கப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. காலை 10 மணிக்ேக கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. ஆனாலும், வெயிலையும் பொருட்படுத்தாமல், வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்த சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும், அவர்களுக்கு உதவி செய்ய, தன்னார்வளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.திருவண்ணாமலை வேங்கிக்கால் ஜெய்பீம் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, அவரது மனைவியுடன் வந்து வாக்களித்தார். அங்கிருந்த வாக்காளர்கள், கலெக்டரை வரிசையில் நிற்க வேண்டாம் என வற்புறுத்தினர். ஆனாலும், சுமார் அரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.அதேபோல், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சே.கூடலூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும், முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.ெப.கிரி, பெரும்பாக்கம் அரசு பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

திருவண்ணாமலை ெதாகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, தேவனாம்பட்டு கிராமம் காட்டுப்புத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலசபாக்கம் அடுத்த எலத்தூர் அரசு பள்ளியில் வாக்களித்தார்.திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில், பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க, எஸ்பி சிபிசக்ரவர்த்தி தலைமையில் அதிரடிப்படையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்குச்சாவடி கைப்பற்றுதல், ஆள்மாறட்டம், தகராறு போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை என போலீ்ஸ் தரப்பில் தெரிவித்தனர்.பெட்டிச் செய்திகள்:பூத் சிலிப்’ பயன்படுத்தி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்
வாக்காளர்களின் புகைப்படம், முகவரி, வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்குச்சாவடி எண், வாக்காளர் பட்டியல் வரிசை எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கிய வாக்களார் சீட்டு (பூத் சிலிப்), அனைத்து வாக்காளர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டது.எனவே, பெரும்பாலான வாக்காளர்கள் பூத் சிலிப் மட்டும் எடுத்துக்ெகாண்டு வாக்குச்சாவடிக்கு வந்தனர். ஆனால், ‘பூத் சிலிப்’ வழிகாட்டி ஆவணமாக மட்டுமே பயன்படுத்தலாம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்ற 12 ஆவணங்களில் ஏதேனும ஒன்று இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து திருப்பி அனுப்பினர்.அதனால், வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்புதலுடன், பூத் சிலிப் பயன்படுத்தி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், வாக்களிக்க ‘பூத் சிலிப்’ ஒரு ஆவணமாக ஏற்கப்பட்டது. இந்த தேர்தலில் அதை ரத்து செய்த விபரம் வாக்காளர்களிடம் முறையாக சென்றடையவில்லை. இதனால், இந்த குழப்பம் ஏற்பட்டது.மேலும், ஒரு வாரத்துக்கு முன்பே வாக்காளர்களிடம் சேர்க்க வேண்டிய பூத் சிலிப், முறையாக சேராததால், வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்குப்பதிவின் போது அவசர அவசரமாக வழங்கிய சம்பவமும் பல இடங்களில் காணப்பட்டது.

வாக்குச்சாவடிக்குள் ‘செல்போன்’
வாக்குச்சாவடி மையத்துக்குள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதியில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. வாக்குச்சாவடி அலுவலர் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என அறிவித்தது.ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தின் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குச்சாவடிகளில் செல்போன்களை பயன்படுத்தினர். ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்ததை செல்போனில் படம் பிடித்த நிகழ்வும் நடந்தது. முகவர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல், வாக்குச்சாவடி அலுவலர்கள் தவித்தனர்.மணக்கோலத்தில் வாக்களிப்புமக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தினமான நேற்று முகூர்த்த நாளாகும். பெரும்பாலான திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடந்தன. எனவே, திருமண விழாக்களில் பங்கேற்ற உறவினர்கள், மணமக்களை வாழ்த்திவிட்டு அவசர அவசரமாக வாக்களிக்க புறப்பட்டு சென்றனர். அதனால், திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்துக்குள் பெரும்பலான மண்டபங்கள் வெறிச்சோடின.மேலும், திருமணம் முடிந்த கையோடு, மணக்கோலத்தில் மணமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு விரைந்து வந்து வாக்களித்த சம்பவங்களும் பல இடங்களில் நடந்தது. போளூர் அடுத்த வெள்ளூர் கிராமம், திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி, கீழ்நாத்தூர், கலசபாக்கம் மோட்டூர் கிராமம், கீழ்பென்னாத்தூர் கார்ணாம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மணகோலத்துடன் மணமக்கள் வாக்களித்தனர்.அப்போது, வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள், மணமக்களுக்கு வரிசையில் முன்னுரிமை அளித்து, வாழ்த்தி அனுப்பியது நெகிழ்ச்சியாக இருந்தது.யாருக்கு வாக்களித்தோம்? வாக்காளர்கள் உற்சாகம் தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று ஒப்புகை ரசீதுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதன்மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை 7 வினாடிகள் திரையில் பார்க்கும் வசதியும், ஒப்புகை ரசீது இயந்திரத்தில் வாக்களித்த சின்னம் அச்சிட்ட சீட்டு விழும் காட்சியும் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால், தங்களுடைய வாக்கு விரும்பிய சின்னத்துக்கு பதிவானதை உற்சாகமுடன் பார்த்து, உறுதி செய்த பிறகே வாக்காளர்கள் அங்கிருந்து சென்றனர்.

வாக்குப்பதிவு சதவீதம்
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி:
காலை 9.00 மணி: 8.12%
காலை 11.00 மணி: 22.90%
பகல் 1.00 மணி: 42.16%
மாலை 3 மணி: 52.76%
மாலை 5 மணி: 65.15%
ஆரணி மக்களவைத் தொகுதி:
காலை 9.00 மணி: 8.75%
காலை 11.00 மணி: 25.51%
பகல் 1.00 மணி: 46.27%
மாலை 3 மணி: 54.52%
மாலை 5 மணி: 68.53%

Tags : constituencies ,Arani ,Thiruvannamalai ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...