×

உசிலம்பட்டியில் பரபரப்பு இன்றைய நிகழ்ச்சிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு விடிய விடிய வந்த ஓட்டு பெட்டிகள்

மதுரை, ஏப். 19: வாக்குப்பதிவு முடிந்து ஓட்டு பெட்டி இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு விடிய, விடிய வந்து சேர்ந்தது. மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் நடந்தது. இத்தொகுதியில் மொத்தம் 1,549 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. 163 மண்டல அதிகாரிகள் தங்களுக்குரிய மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து இரவு 9 மணி முதல் மின்னணு வாக்கு பெட்டிகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.   இத்தொகுதியில் அடங்கியுள்ள மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய சட்ட மன்ற தொகுதியில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் எடுத்துக்கொண்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. நள்ளிரவு முதல் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரத் துவங்கியன. விடிய விடிய இன்று காலை வரை வாக்கு பெட்டிகள் வந்து சேர்ந்தன.  மருத்துவ கல்லூரியில் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த இடங்களில் ஓட்டு பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டது. இன்று காலை  தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீல் வைக்கின்றனர்.

 இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடிகள் தோறும் பதிவான ஓட்டுகளின் விபரங்கள் குறித்து தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை செய்ய உள்ளனர். இதில் அதிகளவில் 90 சதவீதத்திற்கு மேல் பதிவான வாக்குச் சாவடிகளில் எந்தமாதிரியான ஆவணம் மூலம் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டு குறைவு மற்றும் அதிகரிப்புக்கு முறையான காரணம் என்ன?. முறைகேடு ஏதேனும் நடந்ததா என பரிசீலனை செய்கின்றனர்.  இதில் அதிகளவில் பதிவான வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட ஆவணம் குறித்து அதிகாரிகள் தெரிவித்த விளக்கத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல் சந்தேகம் ஏற்படும்படி இருந்தால், மறுதேர்தல் நடத்த தேர்தல் பார்வையாளர்கள் சிபாரிசு செய்யலாம். மே 23ம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் வாக்கு இயந்திரங்கள் உள்ள இருப்பு அறைக்கு மத்திய துணைராணுவ வீரர்கள் 100 பேர் சுழற்சி முறையிலும், அடுத்த அடுக்காக தமிழக சிறப்பு காவல் படையும், மூன்றாவது அடுக்கில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வேட்பாளர்களின் ஏஜென்டுகளும் காவலுக்கு இருக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை