×

நாளுக்குநாள் அதிகரிப்பு விளைநிலங்கள் வீட்டுமனையாக மாற்றம் விவசாயம் காணாமல்போகும் அபாயம்

ராமநாதபுரம், ஏப்.19: ராமநாதபுரம் அருகே நன்கு பாசன வசதியுள்ள விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், மழை பெய்தால் மட்டுமே விவசாயப் பணிகள் நடைபெறும். பருவமழை பெய்து, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் ஓரளவு விவசாயம் செழிக்கும். மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் வானம் பார்த்த பூமியாக உள்ளது. அதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களாக மாறி காட்டு கருவேல மரங்கள் நிறைந்துள்ளன. விவசாயம் செய்வதும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. தரிசு நிலங்களை வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகள் அமைக்கவும் பயன்படுத்தினால் மாவட்டம் வளர்ச்சி அடையும். ஆனால் மாவட்டத்தில் நல்ல விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர்.குறிப்பாக ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் அருகில் உள்ள அம்மன்கோயில் கிராம விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இப்பகுதி நிலங்களில் கண்மாய் பாசனம் மூலம் இரண்டு போக நெல் விவசாயம் நடைபெறும். மேலும் கோடைக்காலங்களில் வெள்ளரி பயிரிட்டு விவசாயிகள் நல்ல லாபத்தை பெறுவர். இந்தாண்டு கூட சில விவசாயிகள் இரண்டு போக நெல் விவசாயம் செய்துள்ளனர். இந்த நிலங்கள் ராமநாதபுரம் நகரின் அருகில் அமைந்திருப்பதால் ரியல் எஸ்டேட் செய்பவர்கள், விலைக்கு வாங்கி வீட்டுமனைகளாக மாற்றி நல்ல விலைக்கு விற்று விடுகின்றனர். விவசாயிகளும் நல்ல விலை கிடைப்பதால் விற்று விடுகின்றனர். விவசாயம் செய்தால் ஒவ்வொரு ஆண்டும் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதை மறந்து, ஒரே நேரத்தில் கூடுதல் தொகை கிடைப்பதாக நினைத்து விவசாயிகளும் நிலங்களை விற்றுவிடுகின்றனர்.

இதேநிலை கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்.எஸ்.மடை, திருப்புல்லாணி பகுதிகள், பேராவூர் முதல் தேவிபட்டினம் வரையிலும், மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அச்சுந்தன்வயல் முதல் சத்திரக்குடி வரையிலும், பட்டணம்காத்தான் முதல் உச்சிப்புளி வரையிலும், நயினார்கோவில் ரோடு பகுதியில் முதுனாள், சூரங்கோட்டை, இடையர்வலசை பகுதியில் உள்ள விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இப்பகுதிகள் நல்ல நெல் விவசாயம் நடைபெறும் நிலங்களாகும். இதுபோன்று அனைத்து விளைநிலங்களும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய தொழிலே மறைந்து போகும்.
இதுகுறித்து அச்சுந்தன்வயல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சாத்தையா கூறுகையில், ‘‘வானம் பார்த்த பூமியில்தான் விவசாம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம். ஆனால் கண்மாய் பாசனம் உள்ள விளை நிலங்களையும் சில விவசாயிகள் விற்பது நல்லதல்ல. ரியல் எஸ்டேட் செய்பவர்களும் விவசாயிகளிடம் ஆசைகாட்டி நிலத்தை வாங்கிவிடுகின்றனர். இந்த நிலை நாட்டில் தொடர்ந்தால் உணவு உற்பத்தி இல்லாமல் வெளிநாடுகளை நாட வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றார்.

Tags : Farm landscape Change ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை