×

விடிய, விடிய வீடு, வீடாக ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

விருதுநகர், ஏப். 18: விருதுநகர் தொகுதியில் ஆளும் கட்சியின் பூத் அலுவலர்கள் விடிய,  விடிய வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு ரூ.200 பணம் விநியோகம் செய்தனர். மாவட்ட நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 15 லட்சத்து 89 ஆயிரத்து 416 வாக்காளர்களும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 14 லட்சத்து 80 ஆயிரத்து 600 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அதிமுக நிர்வாகிகள் மூலம் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் ஆளும் கட்சியினர் விடிய, விடிய வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு தலா ரூ.200 வழங்கினர். வாக்காளர்களுக்கு பண விநியோகம் வீடு, வீடாக சென்று கிளை நிர்வாகிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. பல பகுதிகளில் விநியோகம் செய்வதற்கு வழங்கப்பட்ட பணத்தை அதிமுக கிளை நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு வழங்காமல் சுருட்டியதால் வாக்காளர்கள் அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் மீது அதிருப்தியில் உள்ளனர். அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘வாக்காளர்களுக்கு தலா ரூ.200 வழங்குமாறு பணம் வழங்கினர். கடந்த 8 ஆண்டுகளில் மேல்மட்ட அரசியல் நிர்வாகிகள் மட்டும் சம்பாதித்து வருகின்றனர். கீழ் மட்ட நிர்வாகிகளுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை. மேலும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி உறுதியாகி விட்ட நிலையில் பணம் கொடுத்தாலும் தேமுதிக வேட்பாளரால் ஜெயிக்க முடியாது. அதனால் இதுபோன்ற சமயங்களில் வழங்கப்படும் பணத்தை கீழ் நிலை நிர்வாகிகள் வைத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் புகார் பிரிவில் இரவு நேரங்களில் அலுவலர்கள் இருப்பதில்லை. சில நேரங்களில் இருக்கும் அலுவலர்களிடம் பண விநியோகம் தொடர்பாக புகார் அளித்தாலும் அவர்களும் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை. தலையாரிகள், பெண் போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு எந்த முறையில் நடவடிக்கை எடுப்பது புகாரை யாரிடம் தெரிவிப்பது, எந்த பறக்கும் படையிடம் தகவல் தெரிவிப்பது என தெரியாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஆளும் கட்சியினர் பணம் விநியோகம் செய்ததை கண்டு கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

Tags : District Administration ,Dadi ,Dadi House ,party ,
× RELATED குமரி கடலில் குளிக்க 4-வது நாளாக தடை நீடிப்பு..!!