×

கட்டுப்படுத்துவது எப்படி? வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடப்பட்டது

தேனி, ஏப்.18:  தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான கம்பம் நடுதல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.  தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத இறுதியில் சித்திரைத் திருவிழா எட்டு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இரவு, பகல் என தொடர்ந்து  நடக்கும் திருவிழாவைக் காண தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்த சித்திரை திருவிழா வருகிற மே 7ம் தேதி முதல் மே 14ம் தேதி வரை நடக்க உள்ளது. திருவிழாவிற்கான கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை வீரபாண்டி கிராமத்தில் உள்ள கோயில் வீட்டில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவமூர்த்தியாக பவனி வந்து கோயிலை வந்தடைந்தார்.  இதனையடுத்து, வேதபுரியில் இருந்து பரம்பரைதாரர்களால் வெட்டிவரப்பட்ட முக்கொம்பு கம்பம் நேற்று காலை வீரபாண்டி கோயில் அருகே உள்ள கம்பத்திற்கு மஞ்சள் நீராட்சி நடத்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அங்கிருந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு நடப்பட்டது. இதில் போடியை சேர்ந்த அறியனன், புல்லனன், பெத்தனன் பரம்பரைதாரர்கள் அரிவாளில் ஏறி முன்னே வர கம்பம் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 முக்கொம்பு நடப்பட்ட நாள் முதல் கம்பத்தையே அம்மனாக கருதி, கம்பத்திற்கு 21 நாட்களுக்கு மாவு பூஜை நடத்தப்படும். மேலும் பக்தர்கள் முல்லையாற்றில் இருந்து புனித நீரை எடுத்து வந்து கம்பத்தில் நீரை ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றுவர். கம்பம் நடுதல் முடிந்து 22ம் நாள் கோயில் திருவிழா தொடங்க உள்ளது. இத்திருவிழா வருகிற மே 7ம் தேதி தொடங்கி மே 14ம் தேதி வரை எட்டு நாட்கள் நடக்க உள்ளது.  நேற்று நடந்த கம்பம் நடுதல் நிகழ்ச்சியில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், அமமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.

Tags : temple festivals ,Veerapandi ,
× RELATED திருவாடானையில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி