×

பெரியநாகலூர் அய்யனார் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

அரியலூர், ஏப்.18:  பெரியநாகலூர் அய்யனார்கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள பெரியநாகலூர் கிராமத்தில் புஷ்கலாம்பிகா சமேத அய்யனார் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 9ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி விஸ்வநாதன் வகையறா, மானம் காத்த வகையறா, கோடிஸ்வரன் வகையறா,  மாலையிட்டான் வகையறா, மேல்ரான் வகையறா மற்றும் சின்னநாகலூர் பொதுமக்கள் ஒவ்வொரு தினமும் உபயதாரர்கள் பங்களிப்புடன் அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. தினமும் அய்யனார் சுவாமி திருவீதி நடைபெற்றது.

 இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் அய்யனார் சுவாமி மஞ்சள் பன்னீர் தயிர் சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து அய்யனார் சுவாமி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க அய்யனார் தேருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.சிறப்பு பூஜைக்கு பின்னர் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஏரிக்கரையில் சுற்றி வலம் வந்தது. பக்தர்கள் அர்ச்சனைகள் செய்தனர். பின்னர் தேர் மாலை 6 மணி அளவில் கோயிலை வந்து நிறுத்தப்பட்டது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் தேளூர், மண்ணுழி, பெரிய நாகலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.

Tags : Periyanagallur Ayyanar Temple ,devotees ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...