வேதாரண்யம் அருகே பைக் மோதி வாலிபர் பரிதாப பலி உறவினர்கள் திடீர் மறியலால் பரபரப்பு

வேதாரண்யம், ஏப்.18:   நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் சிவதாஸ் (23). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர்கள் விஜய்(21), விக்னேஷ்(20). இருவரும் மெக்கானிக். இவர்கள் இருதரப்பினரும் வந்த டூவீலர் வேதாரண்யம் காந்தி நகர் என்ற இடத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. இதில் சிவதாஸ் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். விஜய், விக்னேஷ் இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவதாஸ் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சென்று விபத்தில் இறந்த சிவதாஸ் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  இந்நிலையில் சிவதாசின் பெற்றோர் மற்றும்  உறவினர்கள் பிரேத பரிசோதனை விரைவில் முடித்து இன்று (18ம் தேதி) காலை 11 மணிக்கு உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காவிட்டால் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்  எனக்கூறி வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வேதாரண்யம் டிஎஸ்பி ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காலை 11 மணிக்குள் உடலை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் 2 மணிநேரம் தாமதம்விபத்தில் படுகாயம் அடைந்த விஜய், விக்னேஷ் ஆகியோரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அருகில் இருந்தோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு 2 மணிநேரம் தாமதம் ஆனது. இதனால் தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

× RELATED காரைக்காலில் பைக் திருடிய சகோதரர்கள் கைது