×

என்ஐடி கல்லூரி ஆண்டு விழா மாணவர்கள் தலைமைப் பண்பை வளர்த்து அப்துல்கலாம் போல் உருவெடுக்க வேண்டும் மும்பை ஐஐடி பேராசிரியர் அறிவுறுத்தல்

திருவெறும்பூர், ஏப்.18:  மாணவர்கள் தலைமை பண்பை வளர்ப்பதுடன் அப்துல்கலாம் போன்று சிறந்த தலைவர்களாக உருவெடுக்கவேண்டுமென திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியின் ஆண்டு விழாவில் மும்பை ஐஐடி பேராசிரியர் தீபக்படக்  கூறினார்.  திருவெறும்பூர் அருகேயுள்ள என்ஐடி கல்லூரி ஆண்டு விழா நடந்தது. விழாவில் என்ஐடி இயக்குனர் மினிஷாஜிதாமஸ் தலைமை வகித்து பேசுகையில், என்ஐஆர்எப் பொறியியல் கல்லூரிகளின்  தரவரிசைப் பட்டியலில் திருச்சி என்ஐடி 10வது இடம் பிடித்தது, சீமன்ஸ் உற்பத்தி மையத்தின் தொடக்கம், கல்லூரியின்  ஐந்தாண்டு  திட்டம், பல முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள்,  கையொப்பமிடுதல் போன்றவைகளை பட்டியலிட்டார். மேலும் சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தான் போட்டி 2018ல் மற்றும் பிற   போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டினார். பின்னர் கல்லூரி  வென்ற ஸ்வச் விருது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்  பசுமை விருது குறித்தும் விளக்கினார்.  

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  மும்பை ஐஐடி பேராசிரியர் தீபக்படக் கல்வி மற்றும் பிற துறைகளில் சாதித்த  மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கி  பேசுகையில், மாணவர்கள் தங்கள் தலைமைப் பண்புகளை வளர்ப்பதுடன் அப்துல்கலாம் போன்ற சிறந்த தலைவர்களாக உருவெடுக்க வேண்டும்.  பேராசிரியர்கள் தங்கள் துறையில் தேசம் சார்ந்த தீர்வுகளை கண்டறிய வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆறுமுகம், இயக்குனர் சிதம்பரம் ஆகியோருக்கு  நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் சிவம்சர்மா  வரவேற்றார். கல்லூரி முதன்மையாளர் (கல்வி)  பேராசிரியர் சண்முகம்  ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் கல்லூரி பேராசிரியர்களும் மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.மாணவர் சங்கத்  துணைத்தலைவர் வைஷ்ணவி நன்றி கூறினார்.

Tags : NIT College Annual Festival Students ,Mumbai ,IIT ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...