×

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் கொட்டும் மழையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயணம் எஸ்.பி உத்தரவை தொடர்ந்து ஒரு மணிநேரம் நிறுத்திவைப்பு

நாகர்கோவில், ஏப்.18: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் நேற்று கொட்டும் மழையில் எடுத்து செல்லப்பட்டன. பின்னர் எஸ்.பி உத்தரவை தொடர்ந்து ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்குபதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இன்று (18ம் தேதி) காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குபதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6 மணிக்கு பின்னர் வருகின்ற வாக்காளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 6 மணிக்கு முன்னதாக வருகின்றவர்கள் 6 மணி கடந்த பின்னர் வரிசையில் நின்றிருந்தால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குபதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். தொகுதியில் மொத்தம் உள்ள 1694 வாக்குசாவடிகளில் வாக்குபதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 267 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 40 ஆயிரத்து 083 பெண் வாக்காளர்கள், 159 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 791 வாக்குச்சாவடிகளில் வெப்காமிரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

இது நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்குசாவடிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 8552 வாக்குசாவடி முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குசாவடி அலுவலர்களுக்கு நேற்று காலை நான்காவது கட்ட பயிற்சி தொடங்கியது. பயிற்சி முடிந்ததும் பணி ஆணை வழங்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிக்கு முதன்மை அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று வீதம் உள்ள 6 பயிற்சி மையங்களில் இருந்து முதன்மை வாக்குசாவடி அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குசாவடி அலுவலர்கள் வாகனங்களில் சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும், வாக்குபதிவுக்கு தேவையான பொருட்கள் மண்டல அலுவலர்கள் வாயிலாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. தாலுகா அலுவலகங்களில் இருந்து இவை எடுத்து செல்லப்பட்டன. நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் நேற்று மதியம் கன மழை கொட்டியதால் கொட்டும் மழையில் இந்த மின்னணு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் எடுத்துசெல்லப்பட்டு கொண்டு இருந்தன.
ஆனால் மழை ஓய்ந்த பின்னர் கொண்டு செல்லலாம் என்று எஸ்.பி தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

வாக்குசாவடிகளில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு நேற்று மாலையில் வாக்குசாவடிகள்  தயார்படுத்தப்பட்டன. இன்று (18ம் தேதி) காலை 6 மணிக்கு மாதிரி வாக்குபதிவு முகவர்கள் முன்னிலையில் தொடங்குகிறது. இதனையடுத்து காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்குகிறது. பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம். பூத் சிலிப்பை மட்டும் காண்பித்து வாக்களிக்க இயலாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மாற்று ஆவணங்களை காண்பித்தும் வாக்களிக்கலாம்.

குளறுபடிகள் ஏற்படும் இடங்களில் பயன்படுத்த ஏதுவாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் 20 சதவிதம், விவிபேட் 30 சதவீதம் ரிசர்வ் செய்து வைக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி ஏப்ரல் 16ம் தேதி காலை 10 மணி முதல் 18ம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடை செயல்பட தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மதுக்கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 208 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, இவ்வாக்குசாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படுவதுடன் 71 வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பிற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பூத் சிலிப் விநியோகம்

மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று மாலையும் பூத் சிலிப் விநியோகம் தொடர்ந்து நடைபெற்றது. பூத் சிலிப் கிடைக்கப்பெறாவர்கள் வாக்குசாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களை அணுகி பூத் சிலிப் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். வாக்குசாவடி அருகே உள்ள அரசியல் கட்சி முகவர்களை அணுகியும் பூத் சிலிப் விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

மின்னணு இயந்திரங்கள் விபரம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு கட்டுப்பாட்டு கருவிகளுடன் கூடிய 372 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 403 விவி பேட்கள், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு 330 இயந்திரங்கள், 358 விவி பேட், குளச்சல் ெதாகுதிக்கு 360 இயந்திரங்கள், 390 விவி பேட், பத்மனாபபுரம் தொகுதிக்கு 327 இயந்திரங்கள், 354 விவி பேட், விளவங்கோடு தொகுதிக்கு 326 இயந்திரங்கள், 353 விவி பேட், கிள்ளியூர் தொகுதிக்கு 332 இயந்திரங்கள், 359 விவி பேட் ஆகியன எடுத்து செல்லப்பட்டன.

Tags : rainfall ,constituency ,Kanyakumari Lok Sabha ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...