×

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 6 பிங்க் நிற வாக்கு சாவடிகள்

நாகர்கோவில், ஏப்.18 :  கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மொத்தம் 1,694 வாக்கு சாவடிகள் உள்ளன. வாக்கு சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பெண் வாக்காளர்களை கவரும் வகையில் பிங்க் நிற வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு பிங்க் நிற வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்கு சாவடிகளில் கடைநிலை ஊழியர் முதல் பாதுகாப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் வரை அனைவருமே பெண்களாக இருப்பார்கள். ஏராளமான பெண்கள் எந்த தயக்கமும் இன்றி வாக்களிக்க வசதியாக இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாக்கு சாவடியில் பெண் மற்றும் ஆண் வாக்காளர்களும் வாக்களிக்கலாம். 60 சதவீதம் பெண் வாக்காளர்களை கொண்ட பகுதியில் இந்த வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில்  பூதப்பாண்டியில் உள்ள சர்.சி.பி. நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி (வாக்கு சாவடி எண் 39), நாகர்கோவில் தொகுதியில் இந்து கல்லூரி (வாக்கு சாவடி எண் 215), குளச்சல் சட்டசபை தொகுதிக்கு கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி (வாக்கு சாவடி எண் 252), பத்மநாபபுரம்  சட்டசபை தொகுதிக்கு தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி (வாக்கு எண் 207), விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு குழித்துறை அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி (வாக்கு சாவடி எண் 194), கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு பரவை லுத்தரன் தொடக்கப்பள்ளி ( வாக்கு சாவடி எண் 237) ஆகிய 6 இடங்களில் பிங்க் நிற வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குசாவடியில் பணியாற்றும் அனைத்து பெண் ஊழியர்களும் பிங்க் நிறத்தில் தான் சேலை அணிந்து இருப்பார்கள். வாக்கு சாவடி முழுவதும் பிங்க் நிற அலங்கார துணிகள் கட்டப்பட்டு இருக்கும்.

இதே போல் மாதிரி வாக்குசாவடிகள் 6 அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குசாவடிகள் அலங்கரிக்கப்பட்டு குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், இருக்கை வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டு இருக்கும். அதன்படி கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் பூதப்பாண்டியில் உள்ள ஜீவா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ( வாக்கு சாவடி எண் 43), நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு நாகர்கோவில் சிறுமலர் மகளிர்  மேல்நிலைப்பள்ளி ( வாக்கு சாவடி எண் 179), குளச்சல் சட்டசபை தொகுதிக்கு மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி (வாக்குசாவடி எண் 155), பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு திருவிதாங்கோடு அரசு முஸ்லிம் தொடக்கப்பள்ளி (வாக்கு சாவடி எண் 208), விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு திருத்துவபுரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி (வாக்குசாவடி எண் 171), கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு மத்திக்கோடு வடக்கின்கரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி (வாக்கு சாவடி எண் 207) ஆகிய வாக்குசாவடிகள் மாதிரி வாக்குசாவடிகளாக இருக்கும்.

Tags : constituency ,Kanyakumari Lok Sabha ,
× RELATED கன்னியாகுமரி, விளவங்கோடு தேர்தல்கள்...