×

கருங்கல் புனித கருணை மாதா மலை திருச்சிலுவை திருப்பயணம்

கருங்கல், ஏப்.18: கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சொந்தமான வழிபாட்டு தலம் கருங்கல் கருணை மாதா மலை உச்சியில் அமைந்துள்ளது. தவக்காலத்தின் புனித வெள்ளிக்கிழமையன்று கருங்கல் புனித கருணை மாதா மலைக்கு திருச்சிலுவை திருப்பயணமாக சென்று வழிபடுவது வழக்கம். கடந்த 38 ஆண்டுகளாக இத்திருப்பயணம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 39வது திருச்சிலுவை பயணமானது புனித வெள்ளிக்கிழமையன்று (19ம் தேதி) காலை 7.30 மணிக்கு துண்டத்துவிளை தூய அந்தோணியார் ஆலய வளாகத்திலிருந்து தொடங்கி நடைபெற உள்ளது. துண்டத்துவிளை தூய அந்தோணியார் ஆலய விவிலிய பணிக்குழுவினர் இயேசுவின் சிலுவைப்பாடுகளின் 14 நிலைகளையும் தத்ரூபமாக சிலுவை சுமந்து நடித்து செல்வர். ஆலய பாடகர் குழு தலைவர் ஜோ தலைமையில் பக்தியோடு பாடல்கள் பாடி செல்வர்.

இயேசுவின் கல்வாரி பயணத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வினை இது ஏற்படுத்தும். இத்திருப்பயணத்தில் குமரி மாவட்டம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் பக்தியோடு கலந்து கொள்வர். சிலுவைப்பாதையின் இறுதியில் நேர்ச்சைக்கஞ்சி வழங்கப்படும். மலை அடிவாரத்திலிருந்து பேருந்து நிலையம் வரை திருப்பயணிகளை கொண்டுவிட இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருச்சிலுவை பயணத்திற்கான ஏற்பாடுகள் ஆலய அருள்பணியாளர் பீட்டர், இணை அருள் பணியாளர் வீவின்ரிச்சர்டு, திருத்தொண்டர் அலெக்ஸ் ஆகியோருடன் அருள்பணி பேரவை நிர்வாகிகள் வில்லியம், ரெக்ஸ்லின் விஜி, ஜெகன்ததேயுஸ் மற்றும் செல்வம் ஜெஸ்றின் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : shrine ,hill ,
× RELATED அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது