×

பாதியில் வாகனம் நின்றதால் ஜருகுமலைக்கு தலைச்சுமையாக சென்ற வாக்குப்பதிவு இயந்திரம்

சேலம், ஏப்.18: சேலம் ஜருகுமலைக்கு வாக்குப்பதிவு இயந்திரம் ஏற்றிச்சென்ற வாகனம் பாதியில் நின்றதால், வழக்கம்போல தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கென வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று காலை முதலே அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரால்நத்தம் ஊராட்சியின் மலை கிராமமான  ஜருகுமலையில், மேலூர், கீழுர் என இரு ஊர்கள் உள்ளன. இங்கு வாழும் 900 பொதுமக்களில், 675 பேருக்கு வாக்குரிமை உள்ளது. இவர்களுக்காக அங்குள்ள தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தரையிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கிராமங்களுக்கு மலைப்பாதை வழியாக, நடந்து செல்ல வேண்டியிருந்தது. இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டு வந்தன. இதனிடையே சமீபத்தில் மலைப்பாதையில் சாலை அமைக்கும் பணி ெதாடங்கியது. அதன்படி, 3 கிலோ மீட்டருக்கு மலைப்பாதையை சீரமைத்து, மண் சாலையாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று அந்த 3 கிலோ மீட்டர் வரை டெம்போவில், வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், மலைப்பாதையில் 2 கிலோ மீட்டர் சென்றவுடன் அங்குள்ள வளைவில், மண்புதரில் டெம்போ சிக்கிக்கொண்டது. அதிகாரிகள் எவ்வளவோ முயன்றும், டெம்போவை மீட்க முடியவில்லை. இதனால், அதிகாரிகள் அதிருப்தியடைந்தனர். இதனையடுத்து வேறுவழியில்லாமல், மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள், வழக்கம்போல தலைச்சுமையாகவே இயந்திரங்களை கொண்டு சென்றனர். 

Tags : head ,jerkumalai ,
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்