×

கெங்கவல்லி தொகுதியில் 180 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா

கெங்கவல்லி, ஏப்.18:  கெங்கவல்லி தொகுதியில் 180 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் வாக்குப்பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் கண்காணிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதி மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் நாமக்கல் தொகுதிக்குட்பட்ட ஒருசில பகுதிகளும் அடங்கியுள்ளன. சேலம் மாவட்டத்திற்குட்ட கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியானது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் வருகிறது. இத்தொகுதியில் ஆண் வாக்காளர் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 173 பேரும், பெண் வாக்காளர் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 959 பேரும், இதரர் மூன்று பேர் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 135 பேர் வாக்களிக்க உள்ளனர்.

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 263 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம், விவி பேலட், அழியாத மை, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உபகரணங்கள் கெங்கவல்லி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் லாரி மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கெங்கவல்லி தொகுதியில் 263 வாக்குச்சாவடிகளில் 11 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது, எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் 180 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. மேலும், கண்காணிப்பு பணிக்காக நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். சேலம் மாவட்டத்திலேயே இரண்டாவது இடமாக கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் தான் அதிகளவில் வெப்கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்திலேயே அதிக அளவாக சேலம் வடக்கு தொகுதியில் 192 வெப்கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக குறைந்த அளவாக ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் 41 வெப்கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Tags : polling stations ,constituency ,Kankavalli ,
× RELATED மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால்...