×

5 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால் மேய்ச்சல் நிலமாக மாறிய கரியகோயில் நீர்த்தேக்கம்

ஆத்தூர், ஏப்.18:  5 ஆண்டுகளாகவே போதிய நீர் வரத்தின்றி வறண்டு கிடக்கும் கரியகோயில் நீர்த்தேக்கம் மேய்ச்சல் நிலமாக மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்கா பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கரியகோயில் நீர்த்தேக்கம் உள்ளது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கமானது கடந்த 1993ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்திற்கு கல்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் சிற்றாறுகளிலிருந்து வரும் மழைநீர் தான் ஒரே நீராதாரமாகும். மழை மற்றும் பருவகாலங்களில் கிடைக்க கூடிய மழைநீர் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் வரையில் உள்ள ஏரிகள் நிரம்பிய பின்னரே, கரியகோயில் நீர்த்தேக்கத்தில் தேக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு என இரண்டு பிரிவாக தண்ணீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, வில்வனூர், புதூர், தாண்டானூர், கொட்டவாடி, கல்யாணகிரி, படையாச்சியூர், அபிநவம், ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி வழியாக ஆத்தூர், தலைவாசல் வரை உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக கல்வராயன் மலைப்பகுதி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், இந்த நீர்த்தேக்கத்தில் போதிய நீர் தேக்கி வைக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால், கடந்த 3 வருடங்களாக தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் நீர்த்தேக்கத்தை மலைவாழ் கிராம மக்கள் தங்களின் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

வறண்டுபோய் கிடக்கும் இந்த நீர்த்தேக்கத்திற்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில் கல்வராயன் மலை கைக்கான்வளவு பகுதியில் உற்பத்தியாகும் சிற்றோடையின் நீரை கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொண்டுசெல்ல தவறி விட்டதாக தெரிவிக்கின்றனர். விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்க திட்டம் முற்றிலும் பலனின்றி கிடப்பதால் பெத்தநாயக்கன்பாளையம் ஏத்தாப்பூர், ஆத்தூர் பகுதியில் தென்னை, பாக்கு உற்பத்தி முற்றிலும் அழிந்து போக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாக்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலை தேடி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேய்ச்சல் நிலமாக மாறிய இந்த நீர்த்தேக்கத்திற்கு போதிய நீர்வரத்தினை கொண்டு வரும் திட்டங்கள் குறித்து 2 முறை இப்பகுதிக்கு தமிழக முதல்வர் வந்தபோதும் எந்தவித அறிவிப்பினையும் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் கரியகோயில் நீர்த்தேக்கம் கடும் வறட்சியை சந்தித்துள்ளது. நிரந்திர தீர்வாக கைக்கான்வளவு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என பலமுறை தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளோம். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று இந்த பகுதிக்கு குறிப்பாக மலைவாழ் கிராமமான கருமந்துறைக்கு வந்தபோது நேரடியாக சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது, கருமந்துறைக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த சமயத்திலாவது ஏதாவது அறிவிப்பார் என காத்திருந்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. மேய்ச்சல் நிலமாக உள்ள நீர்த்தேக்கத்திற்கு விடிவு காலம் பிறக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நீர்த்தேக்கத்தின் நேரடி, மறைமுக பாசனத்தின் மூலம் மட்டும் தலைவாசல் வரை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என்றனர்.

Tags : water reservoir ,grazing land ,
× RELATED கோடையில் குடிநீருக்கு சிக்கல் இல்லை...