×

போதமலை வாக்குசாவடிக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள்

ராசிபுரம். ஏப்.18: ராசிபுரம் அடுத்த போதமலைக்கு சாலை வசதி இல்லாததால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே போதமலை மலை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் மேலூர், கீழூர் மற்றும் கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், கரடுமுரடான பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், மலைகிராமங்களில் உள்ள மக்கள் வாக்களிக்க 2 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

போதமலைக்கு சாலை வசதி இல்லாததால், 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தலைச்சுமையாக எடுத்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லை.
இதனால், தேர்தல் சமயங்களில் எந்த வேட்பாளரும் எங்கள் பகுதிக்கு வந்து வாக்கு கேட்பதில்லை. எங்கள் கிராமங்களில் யாருக்கேனும் உடல்நலக்குறைவு மற்றும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு செல்வது போன்ற அவசர காலங்களில், சாலை வசதியில்லாததால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு தேர்தலுக்கு மட்டும் அதிகாரிகள் வந்து செல்கின்றனர். மற்ற நாட்களில் யாருமே எங்களை கண்டுகொள்வதில்லை,’ என்றனர்.

Tags : Teaching Hall ,
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா