×

தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்: ‘ஆம்னி’ பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்

சென்னை, ஏப்.18: தொடர் விடுமுறையையொட்டி நேற்று ஏராளமானோர் சொந்த ஊருக்கு ஒரே நேரத்தில் சென்றதால், கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவை அடைய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று (17ம் தேதி) மகாவீரர் ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நாளை புனித ெவள்ளி, அதற்கு அடுத்து 20, 21ம் தேதிகளில் சனி, ஞாயிறாக உள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். அதேபோல் நேற்று இரவும் பலர் பஸ்களில் பயணித்தனர். இவர்களில் பெரும்பாலோனோர் 21ம் தேதி இரவே திரும்புவார்கள்.

சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்களின் வாயிலாக வழக்கமாக இயக்கப்படும் 2,965 பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக நேற்று முன்தினம் இரவு 850 பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று இரவும் 1,500 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. அதேபோல் 21ம் தேதியும் 1,500 கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இயக்கப்பட்ட பஸ்களின் மூலமாக சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு 7,800 பேர் முன்பதிவு செய்து சென்றனர். அதேபோல் முன்பதிவு செய்யாமலும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். மேலும் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதவதற்கு 6,200 பேர் முன்பதிவு செய்தனர். நேற்று இரவு சென்னையில் இருந்து செல்வதற்கு மட்டும் 19 ஆயிரம் பேர், பிற பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு 11 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். மேலும் முன்பதிவு செய்யாமல் ஏராளமானோர் பஸ்களில் பயணம் செய்தனர். இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று ஒரே நேரத்தில் மக்கள் அதிகமாக சொந்த ஊருக்கு சென்றதால், கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கோயம்பேட்டை சுற்றியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு வரிசையாக காத்துக்கிடந்தன. மாநகர பகுதிகளில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு  இயக்கப்படும் எம்டிசி பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆட்டோ, கால் டாக்சிகளில் ஏராளமானோர் பஸ் நிலையத்தை நோக்கி படையெடுத்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்ட ‘ஆம்னி’ பஸ் உரிமையாளர்கள் சிலர், வழக்கமாக வசூல் செய்யப்படும் தொகையைவிட கூடுதலாக வசூல் செய்தனர். அதாவது வழக்கமான கட்டணத்தில் இருந்து ₹700 முதல் ₹1,500 வரை அதிகமாக வசூலிக்கப்பட்டது.

Tags : bus station ,continuation holiday ,Koyambedu ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...