×

மாவட்டம் முழுவதும் சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு: பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவ பாதுகாப்பு

திருப்போரூர். ஏப்.18: காஞ்சிபுரம் மக்களவை மற்றும் திருப்போரூர் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி திருப்போரூர் தொகுதியில் அடங்கிய 307 வாக்குச்சாவடி மையங்களுக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நேற்று நடந்தது. அதற்காக சீல் வைக்கப்பட்ட அறை நேற்று காலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு, மண்டல வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றுடன் ஒரு எஸ்ஐ, ஒரு காவலர், ஒரு உதவியாளர், ஒரு கல்லூரி மாணவர், ஒரு துணை ராணுவப்படை காவலர் உள்பட 7 பேர் சென்றனர்.

இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது. மக்களவை வேட்பாளருக்கு ஒரு இயந்திரம், சட்டமன்றத்திற்கு ஒரு இயந்திரம் என 614 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் இயந்திரங்களும் அனுப்பிவைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவதையொட்டி மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜு தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோல் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அழியாத மை, கைரேகை இங்க்பேட், வாக்காளர் பட்டியல், பேனா, பென்சில், வாக்களிக்கும் இடத்துக்கான மறைவு தடுப்புகள் ஆகியவை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன.

திருப்போரூரில் உள்ள மொத்தம் 307 வாக்குசாவடிகளில் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அடங்கிய கீரப்பாக்கம், எம்.என் குப்பம் உள்பட 8 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அடங்கிய 439 வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் செங்கல்பட்டு ஆர்டிஒ அலுவலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டன.

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் அடங்கிய தைலாவரம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெண்களுக்கான தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இதில் பெண்கள் மட்டுமே வாக்குப்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சட்டமன்ற தொகுதியில் மண்ணிவாக்கம். வல்லம், செங்கல்பட்டு, அறிஞர் அண்ணா பள்ளி ஆகிய இடங்களில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு ஆர்டிஓ முத்துவடிவேல் கூறுகையில், போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயந்திரங்கள் பழுதானால் உடனடியாக மாற்று இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சாய்வு தளங்கள், நாற்காளிகள் உள்ளன. வாக்காளர்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் வாக்களிக்களாம் என்றார்.

Tags : district ,assembly constituencies ,Subcommittee for Tens of Votes ,
× RELATED ஈரோடு மாவட்டம் ஆணைக்கல்பாளையம்...