×

திருத்தணி தொகுதி வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த அதிமுக கிளைச்செயலாளர் கைது

திருத்தணி, ஏப், 18: திருத்தணி தொகுதியில், வாக்காளர்களுக்கு ஓட்டுபோட பணம் பட்டுவாடா செய்த, அ.தி.மு.க கிளைச் செயலாளரை போலீசார் மற்றும் பறக்கும் படையினர் கைது செய்தனர். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில்  இன்று காலை வாக்குப்பதிவு துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே மூர்த்தி போட்டியிடுகிறார். இவர், வாக்காளர்களுக்கு தலா ₹ 200 விநியோகம் செய்ய திட்டமிட்டு இருந்ததாக  தெரிகிறது. அதன்படி அந்தந்த பகுதி நிர்வாகிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரிய நகரம் பகுதி வாக்காளர்களுக்கு அதிமுக கிளைச் செயலாளர் சக்கரபாணி (51)  நேற்று முன்தினம் இரவு சக்கரபாணி வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தார். தகவல் அறிந்ததும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பவனந்தி உத்தரவின்பேரில் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த கிளை செயலாளர் சக்கரபாணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த, 7 ஆயிரத்து 850 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags : AIADMK ,voters ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...