×

ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழ் புத்தாண்டு விழா

மதுரை, ஏப். 18: ஐகோர்ட் மதுரை கிளை ‘மகா’ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சித்திரை தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். விழாவில் நீதிபதி ஆர்.மகாதேவன் பேசுகையில், ‘தமிழின் உன்னத படைப்பு தொல்காப்பியம். எப்படி வாழ வேண்டும் என்பதை பதிவு செய்துள்ளது. அறச்சிந்தனை மிக்க வாழ்க்கையை பதிவு செய்த இனம் தமிழ் இனம். பிற மண்ணில் இருந்து வந்த படையெடுப்புகளால் தமிழின் உன்னத படைப்புகள் அழிக்கப்பட்டன. இருப்பினும், தமிழ் தன்னை புதுப்பித்துக்கொண்டது. சமணம், பக்தி இலக்கியம் தழைத்தோங்கின. எந்த நாட்டைச் சேர்ந்த மனிதனுக்கும் பொருந்தும் உன்னத படைப்பு திருக்குறள். கணிதம், வானியல் என அனைத்து துறைகளிலும் தமிழர்கள் முன்னோடிகளாக இருந்தனர். தற்போது அதிவேக வாழ்க்கையை மாற்றிக்கொண்டுள்ளோம். தமிழில் பேசுவதை, தமிழர்கள் என அடையாளப்படுத்துவதை குறையாக நினைக்கின்றனர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற நம் வாசகத்தை உலகின் பல பகுதிகளில் எழுதி வைத்துள்ளனர். தமிழின் பெருமையை அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நீதிபதிகள், ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil New Year Festival ,Madurai Branch ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...