×

திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பணிக்கு தனியார் வாகனங்கள் அரசுத்துறை வாகன டிரைவர்கள் அதிருப்தி

திருமங்கலம், ஏப். 18: திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பணிகளுக்கு அரசு வாகனங்களை பயன்படுத்தாமல், தனியார் வாகனங்களை பயன்படுத்துவதால், அரசு வாகனங்களின் டிரைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 28 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பயன்பாட்டிற்கு தனித்தனியாக வாகனங்கள் வழங்கப்பட வேண்டும். தேர்தல் பணிக்கு தொகுதியில் உள்ள நகராட்சி, யூனியன் அலுவலகங்களில் உள்ள வாகனங்கள் பயன்படுத்தப்படும். இந்த தொகுதியைப் பொறுத்தவரை 30க்கும் மேற்பட்ட அரசு வாகனங்களும், டிரைவர்களும் உள்ளனர். தேர்தல் பணியில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு வாகனங்கள் பற்றாக்குறை ஏற்படும்போதுதான், தனியார் வாகனங்களை அதிகாரிகள் அனுமதிப்பர். ஆனால், இம்முறை மண்டல அலுவலர்கள் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். திருமங்கலம் தாலுகா அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவிற்கு தேவையான சமான்களை ஏற்றவும் போலீசார், தேர்தல் அலுவலர்களை ஏற்றிச் செல்லவும் தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அரசு வாகன டிரைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு வாகன டிரைவர்கள் கூறுகையில், ‘அரசு டிரைவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே வாக்குச்சாவடியில் மை வைக்கும் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. பலருக்கு தேர்தல் பணி வழங்கப்படவில்லை. இது எங்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது’ என்றனர். இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வாக்குப்பதிவுக்கான வாக்குபெட்டிகளை எடுத்து செல்லவும், பதிவு முடிந்த பின்பு திரும்பவும் எடுத்து வருவது உள்ளிட்ட பணிகளில் எந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை பின்பற்றியே தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளோம். தனியார் வாகனங்களில் இருக்கும் வசதிகள் அரசு வாகனங்களில் இல்லை’ என்றனர்.

Tags : constituency ,Tirumangalam ,state auto drivers ,
× RELATED சென்னை வில்லிவாக்கத்தில் போலி ஆவணம்...