×

சின்னாளபட்டி சித்திரை திருவிழா மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

செம்பட்டி, ஏப். 18: சின்னாளபட்டியில் சித்திரை திருவிழாயொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. சின்னாளபட்டியில் தென்தமிழகத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக சித்திரை திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இவ்வருட 92வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த அமாவாசை அன்று பிருந்தாவனத்தோப்பில் கொடி ஏற்றப்பட்டது நேற்று கோட்டை மந்தை மைதானத்தில் உள்ள தசாவதார கொட்டகை முன்பு அமைக்கப்பட்ட பொன்விழா மேடையில் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.      முன்னதாக  காலை 9 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அப்போது மணமக்கள் வீட்டார் சார்பாக காசியாத்திரை நடைபெற்றது. பின்னர் மணப்பெண்ணான மீனாட்சி அம்மனுக்கு பட்டுப் புடவைகள் பழ வகைகள், பலகாரங்கள் உட்பட நூற்றுக்கணக்கான சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வேத கோசங்கள் முழங்க காலை 10.30 மணியளவில் ஸ்ரீசுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தல், நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களுக்கும் மாங்கல்யம் அணிவித்து  கொண்டனர். திருமணத்தை காண சின்னாளபட்டியில் உள்ள அனைத்து கோயில்களிலும் உள்ள உற்சவ மூர்த்திகளான கணேசர், ஸ்ரீமுருகன், ஸ்ரீசந்தனகருப்பு, ஸ்ரீஅய்யப்பன், ஸ்ரீசவுடம்மன், உற்சவமூர்த்திகள் வந்திருந்தனர். இதில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் ஸ்ரீராமஅழகர் தேவஸ்தான கமிட்டியார்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Meenakshi - Sundareswarar Thirukkalyanam Kolakalam ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்