×

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மானாமதுரை, ஏப். 18: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த ஏழு நாட்களும் சிம்மம், அன்னம், குதிரை, ரிஷப வாகனங்களில் ஆனந்தவல்லியம்மன், சோமநாதர், பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தனர். எட்டாம் நாளான நேற்று காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாவஜனம் செய்யப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.திருவீதியில் கேடயம், நடராஜர் புறப்பாடு துவங்கியதும், திருக்கல்யாணம் பட்டயம் வாசித்தல், காசியாத்திரை நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பின் ஆனந்தவல்லி, சோமநாதருக்கு திருக்கல்யாணத்தின்போது அணிவிக்கும் பட்டுச்சேலை, அங்கவஸ்திரம், வேட்டிகள் பல்லக்கில் வைத்து திருவீதி உலா நடந்தது. சுவாமி சன்னதி அருகில் இருந்த திருக்கல்யாண மண்டபத்தில் ஆனந்தவல்லியம்மன், சோமநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.காலை 12 மணிக்கு ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணத்தை அர்ச்சகர்கள் தெய்வசிகாமணிபட்டர் தலைமையில் சிவாச்சாரியர்கள் நடத்தினர். திருக்கல்யாணத்தை காண வந்த பெண்கள் ஆனந்தவல்லியம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தபோது தங்களது கழுத்தில் தாலியுடன் இருந்த மஞ்சள் கயிறை புதிதாக மாற்றிகொண்டனர். அதன்பின் நெய்விளக்கு, மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
திருக்கல்யாணத்தை காண மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், பார்த்திபனூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். கோயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார், ஆயுதப்படையினர், ஊர்க்காவல்படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். திருக்கல்யாண நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க கோயில் முன்புறமும், வடக்கு ரதவீதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

Tags : Manamadurai Anandwalli ,Somnath temple ,
× RELATED சோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக மோடி தேர்வு