×

பஸ் நிலைய பிளாட்பாரத்தில் மணிலா வியாபாரி சடலம்

பண்ருட்டி, ஏப். 18: பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே பிளாட்பாரத்தில் மணிலா வியாபாரி காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு அடுத்த நரியன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (60), மணிலா வியாபாரி. இவர் தினமும் மணிலா வியாபாரத்திற்காக பண்ருட்டிக்கு வந்து வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பண்ருட்டியில் அவர் தங்கியிருக்கலாம் எனக்கருதிய அவரது குடும்பத்தினர் காலையில் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் வரவில்லை.இந்நிலையில் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் இந்திராகாந்தி சாலை பிளாட்பாரத்தில் கலியபெருமாள் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த வியாபாரிகள் பண்ருட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது முகத்திலும், இரண்டு கால் முட்டிகளிலும் பலத்த காயம் காணப்பட்டது. எனவே அவரை யாராவது கொலை செய்தார்களா? அல்லது விபத்தில் அடிபட்டு இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலிய பெருமாளின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரிப்பதற்காக அதே பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : merchant ,Manila ,bus station ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்