×

தென்காசி, சிவகிரி தாலுகா அலுவலகங்களிலிருந்து 597 வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

தென்காசி, ஏப்.18:  தென்காசி, சிவகிரி தாலுகா அலுவலகங்களிலிருந்து 597  வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.   தென்காசி மக்களவை தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் மட்டும் மொத்தம் 326 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் தேவையான வாக்குபதிவு இயந்திரங்கள், மை உள்ளிட்ட பொருட்கள் நேற்று மதியம் முதல் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு தென்காசி தாலுகா அலுவலகத்திலிருந்து லாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இவற்றில் இரண்டு பேலட் இயந்திரம், ஒரு கண்ட்ரோல் யூனிட், ஒப்புகை சீட்டு வழங்கும் கருவி, மை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். தென்காசி சட்டமன்ற தொகுதியில் உள்ள 326 வாக்குப்பதிவு மையங்களுக்கு சேர்த்து 66 ஸ்பேர் இயந்திரங்கள் உள்ளன. ஏதேனும் வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு இயந்திரம் பழுதானால் அதற்கு மாற்றாக இந்த ஸ்பேர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.                                                                                                            
சிவகிரி: சிவகிரி தாலுகா அலுவலகத்தில் இருந்து வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 271 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
 தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளும் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன. புளியங்குடி நகராட்சி, சிவகிரி, வாசுதேநல்லூர், ராயகிரி ஆகிய 3 பேரூராட்சிகள் மற்றும் 41 கிராம ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியது வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி. இத்தொகுதி முழுவதும் 152 வாக்குச் சாவடி மையங்கள் நிறுவப்பட்டு அதில் 271 பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவகிரி தாலுகா அலுவலகத்திற்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான விவிபேட் இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணிகளை சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா தலைமையில் சிவகிரி தாசில்தார் கிருஷ்ணவேல், ேதர்தல் உதவி தாசில்தார் மைதீன் பட்டாணி, மண்டல துணைத் தாசில்தார் ஆனந்த், தலைமையிடத்து துணை தாசில்தார் ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்தனர். புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளும் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன. தொகுதியில் 56 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 3 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டு அங்கு தமிழக போலீசாருடன் மத்திய ஆயுதப்படை போலீசாரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளன.

Tags : offices ,Tenkasi ,taluk ,Sivagiri ,
× RELATED பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 20 அறைகள் தரைமட்டம்