×

35 நாட்களுக்கு தற்காலிக தீயணைப்பு அலுவலகம் திறப்பு நெல்லை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையம் தயார் சிசிடிவி கேமரா, ஒளிரும் மின்விளக்குகள் அமைப்பு

நெல்லை, ஏப். 18:  நெல்லை தொகுதி வாக்குகள் எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளதால் இப்பகுதியில் இரவிலும் ஒளிரும் கூடுதல் மின்விளக்கு, சிசிடிவி கேமரா, தீயணைப்பு அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முடிந்ததும், நெல்லை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்படுகின்றன. இரவு தொடங்கி நாளை காலை வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள், கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கும் பணி நடைபெறும். தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் இப்பணி நடக்கும். இந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் துப்பாகி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். மேலும் கூடுதல் சிசிடிவி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் சேர்த்து மொத்தம் 26 கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொகுதி வாரியாக உள்ள பாதுகாப்பு அறைகளில் தலா 3 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கண்காணிப்பு டிவிக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் இயங்கும் இக்கேமராவில் பதிவாகும் வீடியோக்களை தேர்தல் உயர் அலுவலர்கள் நேரடியாக தாங்கள் இருக்கும் அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் அரண்களை தாண்டி சம்பந்தமில்லாத நபர் யாரும் உள்ளே செல்ல முடியாது. இங்கு 6 சட்டமன்ற தொகுதி வாரிய வாக்குகள் எண்ணுவதற்கும் தனித்தனி பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வளாகம் முழுவதும் இரவை பகலாக்கும் போகஸ் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக வாக்கு எண்ணும் மையத்தில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு தற்போது இயந்திரங்கள் வைக்கும் அறைகள் மற்றும் எண்ணும் அறைகள், கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை தேர்தல் ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பிற்காக தீயணைப்பு படை தற்காலிக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த 35 நாட்களுக்கு ஒரு தீயணைப்பு வாகனம் இங்கு தயார் நிலையில் இருக்கும். மேலும் வளாகம் முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

Tags : Nellai Lok Sabha ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!