ஆம்பூரில் ஓட்டுக்கு பணம் வழங்கியபோது பறக்கும் படையினர் ₹59 ஆயிரம் பறிமுதல்

ஆம்பூர், ஏப்.18: ஆம்பூரில் ஓட்டுக்கு பணம் வழங்கியபோது பறக்கும் படையினர் ₹59 ஆயிரம் பறிமுதல் செய்தனர். வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த மக்களவை தொகுதியில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் மட்டும் நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட வீராங்குப்பம் ஊராட்சியில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.அதன்பேரில், பறக்கும் படையினர் நேற்று மதியம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் ஓட்டுக்காக வாக்காளர்களிடையே பணம் விநியோகத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த பறக்கும் படையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். பின்னர், பறக்கும் படையினரை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். அப்போது அவர்கள் வைத்திருந்த ₹59 ஆயிரத்தை சாலையில் வீசி சென்றனர். இதைப்பார்த்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை மீட்டு ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலரான பேபி இந்திராவிடம் ஒப்படைத்தனர்.மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதேபோல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ₹13.60 லட்சம் ஆம்பூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பன்னீர்செல்வம் நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தபோது பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

× RELATED பணம் வைத்து சூதாடி கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்