×

தேர்தலையொட்டி ஆம்பூரில் பிரியாணி மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு

ஆம்பூர், ஏப்.18: சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலையொட்டி பிரியாணி மாஸ்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் பல்வேறு பகுதிகளில் மக்களவை தேர்தல் இன்று நடக்க உள்ளது.வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் அவர்களின் தொண்டர்களுக்கான உணவு ஏற்பாடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதில் அனைவருக்கும் சுவையான மட்டன், சிக்கன் பிரியாணி வழங்க பல்வேறு தரப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால், தற்போது ஆம்பூரில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்களில் பிரியாணி ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.மேலும், ஒரு சில இடங்களில் பிரியாணிகள் தயார் செய்ய உரிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி ஆம்பூரை சேர்ந்த பிரியாணி மாஸ்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு முன்னதாகவே இந்த பிரியாணி மாஸ்டர்களை பல்வேறு கட்சியினர் புக் செய்து அட்வான்ஸ் கொடுத்து உள்ளனர். மேலும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், பெரும்புதூர், அரக்கோணம்,திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரியாணி தயார் செய்ய பிரியாணி மாஸ்டர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான கட்டணத்தை கூடுதலாக தந்து அழைத்து சென்று பிரியாணி தயாரித்து தங்களை சார்ந்தவர்களை குஷிப்படுத்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ஆம்பூரில் பிரியாணி மாஸ்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில பிரியாணி கடைக்காரர்கள் தங்களது ஆர்டர்களை எப்படி பூர்த்தி செய்யப் போகிறோம் என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

Tags : Briyani masters ,Ambur ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...