×

மாவட்டத்தில் பதற்றமான 78 வாக்குசாவடியில் சிஆர்பிஎப்., பாதுகாப்பு

ஊட்டி, ஏப். 17: நீலகிரி தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளில் சி.ஆர்.பி.எப்., படையினர் மற்றும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 240 கி.மீ., தூர மாவட்ட எல்லை எஸ்.டி.எப்., மற்றும் என்.எஸ்.டி., கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என மாவட்ட எஸ்.பி., சண்முகபிரியா தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 70 பேர் கொண்ட சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் 80 பேர் கொண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் ஊட்டி வந்துள்ளனர். இவர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடந்தது. பழங்குடியினர் பண்பாட்டு மையம் அருகே துவங்கி கொடி அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக மத்திய பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய தொகுதிகளில் உள்ள 684 வாக்குசாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி., சண்முகப்பிரியா கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை மூன்று மாநில எல்லையில் அமைந்துள்ளது. 16 எல்லையோர சோதனை சாவடிகள் உள்ளன. அனைத்து சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் மலப்புரம், வயநாடு, பாலக்காடு மற்றும் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ளன.
மேலும், எல்லைேயார பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ளதால் நமது மாவட்டத்தில் உள்ள மக்கள் குறிப்பாக பழங்குடியின மக்கள் தைரியமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையிலும், தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என யாரேனும் மக்களை அணுகிடுவதை தவிர்க்கும் வகையிலும், அதிரடிபடையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் பழங்குடியினர் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் ஜலீல் என்ற மாவோயிஸ்ட் சமீபத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதற்கு பிறகு, அவர்கள் தேர்தலை புறக்கணிக்க கோரி பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்குள் அவர்கள் நுழைந்து மக்களை அச்சுறுத்த கூடாது என்பதற்காத 200 அதிரடிபடையினர், நக்சல் தடுப்பு பிரிவில் 50 பேரும், காமாண்டோ பயிற்சி முடித்த 44 ேபர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 240 கி.மீ., தூர மாவட்ட எல்லை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாக்குபதிவு தினத்தன்று டாஸ்மாக் மது கடைகள் அனைத்தும் மூடப்படும். நீலகிரி தொகுதியை பொறுத்த வரை 78 பதற்றமான வாக்குசாவடிகள் உள்ளன. அங்கு சி.ஆர்.பி.எப்., படையினர் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்’. இவ்வாறு சண்முகபிரியா கூறினார்.

Tags : CRPF ,district ,voting districts ,
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்