×

நாங்கள் என்ன கறுப்பு ஆடுகளா?: அய்யாக்கண்ணு கேள்வி

திருச்சி, ஏப்.17:   நாங்கள் என்ன கறுப்பு ஆடுகளா? என அய்யாக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.   
 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளை திரட்டி டில்லி சென்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றாத மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகளை கண்டித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார். இந்நிலையில், மக்களவை தேர்தலில் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாகவும், அதற்காக அகோரி வேடமிட்டு பிச்சை எடுத்து வேட்பு மனுக்கான தொகையை திரட்டுவோம் என அறிவித்தார்.  இதற்கிடையே டில்லியில் அமித்ஷாவை சந்தித்த அய்யாக்கண்ணு, ‘அமித்ஷாவை சந்தித்தது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது. நாங்கள் முன்வைத்த ஆறில், 5 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் வாரணாசி தொகுதியில் விவசாயிகள் போட்டியிடும் போராட்டம் வாபஸ் பெறுகிறோம்’ என தெரிவித்தார். அவரது திடீர் மனமாற்றம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அய்யாக்கண்ணு விவசாயிகளின் போராட்டங்களை தவறாக பயன்படுத்திக்கொண்டார். திடீரென வாபஸ் பெற வேண்டிய அவசியம் என்ன? என தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்பினர். இதனால் நொந்து போன அய்யாக்கண்ணு தன்னைப்பற்றி தவறான செய்திகள் வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்தார்.

 அப்போது அய்யாக்கண்ணு கூறுகையில், ‘நாங்கள் எந்த கட்சியும் சாராத சங்கத்தினர். எந்த கட்சிக்கும் ஓட்டுப்போட சொல்லி பிரசாரம் செய்யவில்லை. ஆனால் திமுக-காங்கிரஸ் தூண்டுதலின் பேரில் டில்லிக்கு சென்று நானும், எனது சங்கத்தினரும் போராடியதாக சில செய்திகள் வருகிறது. எங்களை யாரும் அனுப்பவில்லை. எங்களுக்கு யாரும் பைசா தரவில்லை. என்னை பற்றி தவறான, பொய்யான செய்தி பரப்புவது கண்டிக்கத்தக்கது. டில்லியில் அமித்ஷாவை சந்தித்து பணம் வாங்கியதாக கூறுகின்றனர். இந்த செய்திகளை யார் பரப்புகின்றார்கள் என்பதை கண்டுபிடித்து, அவர்கள் மீது மானநஷ்ட, கிரிமினல் வழக்குகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம் என தெரிவித்துள்ளோம். அரசியல் கட்சியினர் ஓட்டு வாங்கக்கூடாது என்பதற்காக எங்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் தப்பிக்க நாங்கள் கறுப்பு ஆடா?’ என்றார்.


Tags :
× RELATED தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள்,...