இத்தனை ஆண்டுகள் தாய்போல் என்னை மடியில் தாங்கியவர்கள் புதுகை மக்கள் பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் உருக்கம்

புதுக்கோட்டை, ஏப்.17:  திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் நேற்று மாலை  புதுக்கோட்டை நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இறுதியாக  அண்ணா சிலை பகுதியில் தனது வாக்கு பிரசாரத்தை நிறைவு செய்தார்.  அப்போது  திருநாவுக்கரசர் பேசியதாவது: கடந்த 20 நாட்களாக கூட்டணி கட்சியினர் தாங்கள்  ஒவ்வொருவரும் வேட்பாளராக கருதி சங்கடமின்றி, மனப்பூர்வமாக பணியாற்றினர்.  அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப்பெட்டியை அனுப்பி  வைக்கும்போதும், மே 23ம் தேதி நாம் வெற்றி பெற்றோம் என்று அறிவிக்கும்  வரையிலும் செயல்படும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை  ஆண்டுகள் என்னை தாய்போல் மடியில் தாங்கியவர்கள் புதுக்கோட்டை மக்கள்.  பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் கட்சி எல்லை, சாதி,  மதங்களை கடந்து உங்களையே சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். திருச்சி  தொகுதியில் போட்டியிடுவோரில் எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டு அகில இந்திய  தலைவர்களோடு பழகிய நான் போட்டியிடுகிறேன்.

மற்றொரு பக்கம் தர்மபுரியில்  இருந்து வந்து போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றால்  என்ன சாதிக்கப்போகிறார்? அவர் மத்தியில் அமைச்சராக போகிறாரா? அல்லது  விஜயகாந்த் பிரதமராக போகிறாரா? எதுவும் நடக்கப்போவதில்லை. அதே போன்று,  அமமுக ஒரு அரசியல் கட்சியே இல்லை. அந்தக் கட்சியினர் திருச்சி தொகுதியில்  மட்டுமின்றி தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறப்போவதில்லை. நான்  இத்தனை ஆண்டுகளில் நல்லது செய்திருப்பேனே தவிர, எவருக்கும் துரோகம்  செய்ததில்லை. எனவே, என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். புதுக்கோட்டை மக்களின்  நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மேலும், புதுக்கோட்டை மக்களவைத்  தொகுதி இல்லாமல் போனது வருத்தத்துக்குரியது. தொகுதி மறு சீரமைப்பின்போது  மீண்டும் புதுக்கோட்டை தொகுதி உருவாக்கப்படும் என்றார். பிரசாரத்தின்போது திமுக வடக்கு மாவட்ட செயலாளர், எம்எல்ஏ பெரியண்ணன்அரசு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Thirunavukarar ,campaign ,Congress ,
× RELATED புதிய தலைமைக்கான பிரசாரம்: பீகார்...