×

மக்களவை தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு நுண் பார்வையாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

பெரம்பலூர், ஏப். 17: பெரம்பலூர், சிதம்பரம் மக்களவை தேர்தலில் பணியாற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் நுண் பார்வையாளர்களுக்கான வாக்குச்சாவடி மையங்களை கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பணிகள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பெரம்பலூர் மக்களவை தொகுதி பொது பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி முன்னிலை வகித்தனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சாந்தா தலைமை வகித்தார்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 332 வாக்குச்சாவடி மையங்கள், குன்னம் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை-1, வாக்குச்சாவடி அலுவலர் நிலை-2, வாக்குச்சாவடி அலுவலர் நிலை-3 வாக்குச்சாவடி அலுவலர் நிலை-4 உள்ளிட்ட நிலைகளில் 3,159 பணியாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். மேலும் 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர் நிலை-2 அவர்களுக்கு உதவியாக இருப்பதற்காக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 24 பேர், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 7 பேர் என மொத்தம் 31 வாக்குச்சாவடி அலுவலர் நிலை-4 நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் பதற்றமான 36 வாக்குச்சாவடிகளும், நெருக்கடியான 4 வாக்குச்சாவடிகளும், குன்னத்தில் பதற்றமான 47 வாக்குச்சாவடிகளும், நெருக்கடியான 1 வாக்குச்சாவடியும் என மொத்தம் 83 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும், 5 வாக்குச்சாவடிகள் நெருக்கடியானதாகவும் கண்டறியப்பட்டு இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வாக்குச்சாவடி மையங்களும் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : Polling officers ,election ,Lok Sabha ,selectors ,
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில்...