×

காரைக்குடியிலிருந்து வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் போக்குவரத்தை மாற்றிவிட கோரிக்கை

மயிலாடுதுறை, ஏப்.17: இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சுவாமிநாதன் மயிலாடுதுறை ஆர்டிஓ.கண்மணியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அதில் அவர்தெரிவித்திருப்பதாவது: நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா, வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி சமேத  வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவான் தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை காரைக்குடி வாழும் நகரத்தார் சமூக மக்கள் சார்பாக சிறப்பாக விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்காக காரைக்குடியிலிருந்து பாதயாத்திரையாக சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருகிறார்கள்.   வரும்  23ம்தேதி செவ்வாய்க்கிழமை (சித்திரை 10) நடைபெற உள்ளது. சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மயிலாடுதுறை வரும் போது மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.

மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் நோக்கி மிகவும் தளர்ச்சியுடன், அயர்ச்சியுடன் நடந்து வரும்போது ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுசேர்ந்து செல்லும் இடமாக மயிலாடுதுறை சீர்காழிப் பாதை உள்ளது, அந்த ஒருநாள் இரவு மட்டும் போக்குவரத்து அவர்களுக்கு இடையூறாக உள்ளது. மேலும் சாலையின் இரு புறங்களிலும் பக்தர்கள் ஓய்வெடுப்பதால் பேருந்துகள் மிகவும் மெதுவாக இயக்கப்படுவதால் பயணிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மயிலாடுதுறை - சீர்காழி மார்க்கமாக செல்லும் பேருந்துகளை, மயிலாடுதுறை - நீடூர் - பட்டவர்த்தி - வைத்தீஸ்வரன் கோயில் - சீர்காழி வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். 22ம்தேதி மாலை 6 மணி  முதல் 23ம்தேதி காலை 7 மணி வரை மட்டும் இந்த போக்குவரத்து மாற்றத்தினை  செய்தால் போதுமானது. இதனால் பக்தர்களும் பயணிகளும் மிகுந்த பலன் அடைவார்கள். ஆகவே, ஆர்டிஒ அவர்கள்  இது விஷயத்தில் கவனம்செலுத்தி  போக்குவரத்து மாற்றம் செய்ய தேவையான நடவடிக்கைகளை  மேற்கொண்டு உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Millions ,pilgrims ,Vaitheeswaran ,Karaikudi ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...