×

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பலனடைய உணவு பூங்கா அமைக்கப்படும்

தர்மபுரி, ஏப்.17: தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் பலனடைய உணவு பூங்கா அமைக்கப்படும் என டாக்டர் அன்புமணி பிரசாரம் செய்தார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில், பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி போட்டியிடுகிறார். இவர், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை 9.30 மணிக்கு ஆர்.கோபிநாதம்பட்டியில் பிரசாரத்தை தொடங்கினார்.
மொரப்பூர், அண்ணாமலைப்பட்டி, ஈச்சம்பாடி, இருமத்தூர், வகுரப்பம்பட்டி, கம்பைநல்லூர், ஜக்குப்பட்டி, முல்லைநகர், தொட்டாரனஅள்ளி, பாலக்கோடு சர்க்கரை ஆலை, வெள்ளிச்சந்தை, மல்லுப்பட்டி, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம் பகுதியிலும், இறுதியாக நேற்று மாலை 6 மணிக்கு பாலக்கோடு பேரூராட்சியிலும் பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.

பிரசாரத்தின்போது பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி பேசுகையில், தர்மபுரி மாவட்டம் முழுக்க முழுக்க மழையை நம்பியே இருக்கிறது. இந்த மாவட்டத்தில் முழுமையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு 13 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் கண்டறிந்து, செயல்படுத்த அரசு பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை, எனக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் யாரும் ஏற்படுத்தவில்லை.
பாளையம்புதூர்- ஜெகநாதன் கோம்பை மாரியம்மன்கோயில் பள்ளம் அணைக்கட்டு திட்டம், பஞ்சப்பள்ளி- ஜெர்தலாவ் பாசனக் கால்வாய்திட்டம், தூள்செட்டி ஏரி இணைப்பு திட்டம், எண்ணேகோல்புதூர்- தும்பலஅள்ளி நீர்ப்பாசனத்திட்டம் ஆகிய 4 திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.

Tags : food parks ,Dharmapuri district ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...