×

சிவகாசி நகராட்சி பகுதியில் பயன்பாடின்றி சேதமடையும் பயணிகள் நிழற்குடைகள்

சிவகாசி, ஏப்.17. சிவகாசி நகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள பல பயணிகள் நிழற்குடை பயன்பாடின்றி சேதமடைந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி பொது நிதியில் கட்டப்பட்டுள்ள இந்த நிழற்குடைகளை பயனபாட்டிற்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நகராட்சி பகுதியில் பாதுகாப்பான சாலை, மேம்பாலங்கள் போன்ற வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இந்நிலையில் சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிவகாசி நகரின் வாகன பெருக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நகரின் முக்கிய இடங்களில் சாலைகள் மிகவும் குறுகலாகவும், நடுவில் டிவைடர்கள் இல்லாமலும்  உள்ளதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் சாலைகளை அகலப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிவகாசி நகர் பகுதியில் வெளியூர், உள்ளுர் பேருந்துகள் நின்று செல்ல 15க்கும் மேற்பட்ட இடங்களில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுத்தங்களில் பயணிகள் காத்திருந்து செல்ல நகராட்சி பொது நிதி, மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல இடங்களில் பஸ்நிறுத்தங்கள் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்காமல் சற்று தொலைவில் அமைத்துள்ளனர்.

சிவகாசி-சாத்தூர் ரோட்டில் கம்மவார் மண்டபம், சிவகாசி-விருதுநகர் ரோட்டில் பைபாஸ், குறுக்கு பாதை, சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், சாட்சியாபுரம் ஆகிய இடங்களில் பல லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை பஸ் நிறுத்தத்தை விட்டு சற்று தொலைவில் அமைத்துள்ளனர். இதனால் இந்த நிழற்குடைகளை பயணிகள் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். கடைகள் அமைத்து சிலர் ஆக்கரிமித்து வருகின்றனர். இதுபோன்று பயன்பாடின்றி கிடக்கும் நிழற்குடைகளை பராமரித்து அதன் அருகில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,municipality ,Sivakasi ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு