×

பூட்டு தொழிலுக்கு பூட்டு போட்டவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் பேச்சு

திண்டுக்கல், ஏப். 17: மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் நேற்று திண்டுக்கல் நகர் டூவீலர் பேரணியில் பங்கேற்று பேசியதாவது, ‘திண்டுக்கல் மாவட்டத்தின் அடையாளமாக இருந்த பூட்டு தொழில் இன்று ஜிஎஸ்டி வரியால் அழிந்து வருகிறது. பூட்டு தொழிலுக்கு பூட்டு போட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இந்த தொழில் மீண்டும் மறுமலர்ச்சி பெறவும், சர்வதேச சந்தையில் போட்டியிடும் அளவிற்கு தரமான பூட்டுக்கள் தயாரிக்கவும், பூட்டுக்கு பழநி பஞ்சாமிர்தம் போல் புவிசார் குறியீடு பெறுவதற்கும் நான் முயற்சி எடுப்பேன்.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள 10 ஊராட்சிகளுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க மாநகராட்சியுடன் இணைக்கப்படும். ஜிக்கா பைப் மூலம் முறையாக குடிநீர விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமலையில் விளையும் காபி, மிளகு, ஏலக்காய், கடுக்காய், பலா, எலுமிச்சையை விற்பதற்கு தனியாக ஒரு மையம் திண்டுக்கல் நகரில் ஏற்படுத்தப்படும். திண்டுக்கல்லில் தேஜஸ் உள்பட அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கும், பழநியை பல நகரங்களுடன் இணைக்கும் வகையில் ரயில் வசதிகள் செய்து தரப்படும். பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்கள், ஊராட்சிகள், நகரங்களில் புதிய ரோடுகள் அமைக்கப்படும்.

துர்நாற்றம் வீசும் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் நகரின் வெளிப்புறத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்படும். தொழிற்பேட்டையில் நவீன தொழில்நுட்பத்துடன் பல தொழில்கள் இளைஞர்கள் துவக்குவதற்கு பயிற்சிகள் வழங்கப்படும். மலைக்கோட்டை சுற்றுலா தலமாக்கி வெளிநாட்டு பயணிகளும் கண்டு மகிழும் வகையில் நவீன வசதிகள் செய்யப்படும். இதை எல்லாம் நிறைவேற்றிட எனக்கு பரிசு பெட்டியில் வாக்களியுங்கள்’ என்றார். உடன் கிழக்கு மாநகர மாவட்ட செயலாளர் ராமுத்தேவர், மேற்கு பகுதி செயலாளர் அன்சாரி, ஒன்றிய செயலாளர் கருணாகரன், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், வெள்ளாளர் முன்னேற்றக்கழக தலைவர் பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Jyothi Murugan ,home lockers ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் குடிநீர்...