×

வாக்காளர் பட்டியலில் 250 பெயர்கள் நீக்கம் வாக்குச்சாவடியை முற்றுகையிடுவதாக பொதுமக்கள் எச்சரிக்கை

திருப்போரூர், ஏப்.17: படூரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 250 வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டன. இதனை கண்டித்து, வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம்,  திரூப்போரூர் வட்டத்தில் அடங்கிய படூர் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2016ம் ஆண்டு  இந்த ஊராட்சியில் வசித்து வரும் சுமார் 214 பேர், வாக்காளர் பட்டியலில்  இருந்து நீக்கப்பட்டனர். இதனை கண்டித்து அனைவரும் பல்வேறு போராட்டங்கள் செய்தும் உரிய அதிகாரிகளிடம் மனுக்களையும் அளித்தனர். அப்போதைய மாவட்ட கலெக்டர் ெகஜலட்சுமி சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து நீக்கப்பட்ட அனைவரின் பெயர்களையும் மீண்டும் படூர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, மீண்டும் அவர்கள் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்களிக்க படூர் ஊராட்சி முழுவதும் வீடு தோறும்  வாக்காளர்  பூத் சிலிப் படிவங்கள், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் மூலம் வழங்கப்பட்டன. அதில் 2016ம் ஆண்டு பெயர் நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்ட அந்த 214 வாக்காளருக்கும் ஒட்டு மொத்தமாக பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி பூத் சிலிப் வழங்கவில்லை. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் காரணம் கேட்டபோது, உங்கள் பெயர்கள் படூர்  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அவர்கள் நேற்று மதியம் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜுவிடம் நடந்த சம்பவங்களை கூறி மனு வழங்கினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கூறிய அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் நடக்கும் நாளில், படூர் கிராம வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags : nominees ,
× RELATED தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தில் 2 பேர் தேர்வு