×

மன்னார்குடி அருகே சைக்கிள் மீது பைக் மோதி விவசாயி பரிதாப சாவு

மன்னார்குடி, ஏப். 17:  திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட ஆலங்கோட்டை கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் அய்யாவு (58). விவசாயி. இவர்  மீன் வாங்குவதற்காக நேற்று காலை வீட்டிலிருந்து  சைக்கிளில் மெயின் ரோட்டிற்கு வந்தார். அப்போது பட்டுக்கோட்டை மன்னார்குடி நெடுஞ்சாலையில்  மன்னார்குடி நோக்கி மேல நெம்மேலி கிராமத்தை சேர்ந்த மணி (26) என்பவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஆலங்கோட்டை கேணி பாலம் அருகில் சைக்கிள் மீது மணி ஒட்டி வந்த பைக்  மோதியதில் அய்யாவு பலத்த காயமடைந்து  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் மணியை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரவாக்கோ ட்டை இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி, எஸ்ஐ  பிரபாகரன் மற்றும் போலீசார் அய்யாவுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு: திருவாரூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தோளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கவியரசன் மனைவி செல்வி. இவரது உறவினர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் நம்மாழ்வார் கோயில் தெருவை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் முத்து சரவணன் (37), கார்த்தி (30). இவர்கள் இருவரும் செல்வி வீட்டிற்கு விருந்தினராக வந்திருந்தனர். நேற்று காலை அங்குள்ள சிவன் கோவில் குளத்தில் குளிக்க சென்றனர். நீண்ட நேரமாகியும் குளிக்க சென்றவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்கள் குளத்திற்கு சென்று தேடிய போது குளத்து நீரில் மூழ்கியது தெரிய வந்தது. இருவரையும் மீட்ட போது முத்து சரவணன்  நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தார். கார்த்தி ஆபத்தான நிலையில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆலிவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  செய்து வருகின்றனர்.

வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது:திருவாரூர் மாவட்டம் மேலமறவாகாடு பகுதியை சேர்ந்தவர் கதிர் (30). இவர் நேற்று மன்னார்குடி பைபாஸ் ரோடு விளையாட்டு மைதானம் அருகே பைக்கில் சென்ற போது பின்னால் வேறொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென கதிரை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் மதிப் பிலான செல்போனை பறித்து கொண்டு தப்பியோடினர். இதனால் அதிர்ச்சியடைந்த கதிர் சத்தம் போடவே அப்போது அப்பகுதியில் நின்ற சிலர் செல்போனை பறித்து கொண்டு பைக்கில் சென்ற 2 வாலிபர்களையும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். சிலர் வழிப்பறியில் ஈடுபட்ட  வாலிபர்களுக்கு  தர்ம அடி கொடுத்தனர்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார்குடி போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் பிடித்து அவர்களிடமிருந்து செல் போனை மீட்டனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் (21), அமிர்தராஜ் (22) என தெரிய வந்தது. மேலும் இருவரும் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போலீசார்  இருவர் மீதும் வழக்கு பதிந்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் இருவரும் மன்னார்குடி கிளை சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

Tags : Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...