×

மதுக்கூர் அருகே பவர் ஹவுசில் தீ விபத்து முத்துப்பேட்டை பகுதியில் 2வது நாளாக மின்தடை பணம் பட்டுவாடா செய்ய சதி திட்டமா?

முத்துப்பேட்டை, ஏப். 17: மதுக்கூர் அருகே பவர் ஹவுசில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரகப்பகுதி, கிராமங்களில் இரண்டாவது நாளாக  மின் தடை ஏற்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்ட சதி என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட ஒன்றிய கிராமங்கள் மற்றும்  அதிராம்பட்டினம், தாமரங்கோட்டை ஊராட்சி பகுதிகளுக்கு மதுக்கூர் அருகே உள்ள வாடியக்காடு பவர் ஹவுஸ் வாயிலாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.இந்நிலையில் இங்கு பெரிய டிரான்ஸ்பார்மர் நேற்று முன்தினம் மாலை  திடீரென வெடித்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் முக்கிய பாகங்கள் தீயில் எரிந்ததால் டிரான்ஸ்பார்மர் முற்றிலுமாக செயலிழந்தது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெற்று வந்த முத்துப்பேட்டை உட்பட நூற்றுக்கணக்கான கிராமப்புற பகுதிகள் மின்சாரமின்றி இருண்டது.அண்மையில் கஜா புயல் தாக்கத்தில் முத்துப்பேட்டையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒருமாதம் வரையிலும் மின் விநியோகமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதன்பிறகு இணைப்புகள் சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் இருந்த நிலையில் இப்போது ஏற்பட்ட தீ விபத்தினால் மின்விநியோகம் மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கடும் வெயிலால் அனல் பறக்கிறது. இந்நிலையில் மின் வினியோகம் இல்லாததால் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. நேற்று 2வது நாளாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மக்களும், வியாபாரிகளும் பெரியளவில் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில் திமுக, காங்கிரஸ், வியாபாரிகள் மற்றும் எதிர் கட்சியினர் இந்த மின் விபத்து திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டுகின்றனர். கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட போது மக்கள் தங்களது செல்போன், டார்ச் லைட் போன்றவற்றுக்கு சார்ஜ் போட்டது போன்று ஜெனரேட்டர் உள்ள இடத்திற்கு சென்று சார்ஜ் போட்டு வருகிறனர். ,தனால் முத்துப்பேட்டை பகுதி கடைகளில் மெழுகுவர்த்தி, கொசுவர்த்திகளுக்கும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து திமுக மாவட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் கூறுகையில்,
வழக்கமாக அதிமுக அரசு செய்யும் சதிவேலையை தற்போது செய்துள்ளது. இந்த மின் விபத்து திட்டமிட்ட செயல் தான். இனிமேல் கரண்ட் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன, அதுதான் தொகுதி முழுவதும் பணம் பட்டுவாடா செய்தாகி விட்டதே. இனி மக்கள் பாடுதான் சிரமம். உரிய அதிகாரிகள் தலையிட்டு முத்துப்பேட்டை பகுதியில் மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் கூறுகையில், அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் தோல்வி பயம் தொற்றி விட்டது.. அவர்களுக்கு முழு தோல்வியை தருகின்ற இதுபோன்ற பகுதியில் இந்த மின் குளறுபடியை செய்து இருட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கின்றனர்.

இதன் மூலம் கிடைக்கின்ற ஓட்டுகளை  வாங்கியாவது கவுரவமான தோல்வியை தழுவ வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது நடக்காது. மக்கள் பணத்தை ஆளுங்கட்சியினரிடம் வாங்கினாலும் மத்தியிலும் மாநிலத்திலும் மாற்றங்கள் வேண்டும் என முடிவு செய்து விட்டனர். அதனால் இந்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் படுதோல்வியை தருவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மின் விபத்து திட்டமிட்ட ஒரு மிகப்பெரிய சதிவேலை. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.வர்த்தக கழக தலைவர் மெட்ரோ மாலிக் கூறுகையில், அரசியல் கட்சியினர் சதி செய்ததா அல்லது எதார்த்தமாக நடந்ததா என்று தெரியாது. இதன் மூலம் பாதிக்கப்பட்டது மக்களும் வியாபாரிகளும் தான். மின்சார வாரியம் உடன் பணிகளை மேற்கொண்டு உடன் முத்துப்பேட்டை பகுதியில் மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும் என்றார்.  இது குறித்து திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் கூறுகையில்,இரவிலிருந்தே சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. முத்துப்பேட்டைக்கு வாய்மேடு, தில்லைவிளாகம் வழியாக மின் இணைப்பு தர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதேபோன்று பெருகவாழ்ந்தான், சித்தமல்லி வழியாக முத்துப்பேட்டைக்கு மின் இணைப்பு தர நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. பணிகள் கூடுதல் பணியாளர்களுடன் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று(நேற்று)  இரவுக்குள் மின்சாரம் வழங்கப்பட்டு விடும் என தெரிவித்தார்.ஆனாலும் இரவிலும் மின் தடை இருந்தது. இந்நிலையில் அதிகாரிகள் கூறுவது ஆறுதலுக்குத்தான். இரண்டு நாளைக்கு பணி இருக்கின்றது. எனவே நாளைக்கும் (இன்று) மின் தடை நீடிக்கும் என்று மின் பணியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : area ,Muthupettai ,Power House ,Madukur ,
× RELATED சிவகாசியில் கொரோனா பாதித்த ‘லாக்டவுன்’ பகுதியில் சொதப்பும் அதிகாரிகள்