×

ஐடி சோதனையில் அமைச்சர் உறவினர் வீட்டில் சிக்கியது வெறும் ₹2 லட்சம் தான்

சென்னை, ஏப். 17: மாதவரம் அருகே அதிமுக அமைச்சர் உறவினரின் வீடு, அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனையில் சுமார் ரூ.2லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாதவரம் அருகேயுள்ள மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலை குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (50). அதிமுக பிரமுகரான இவர், தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் உறவினர். டிராவல்ஸ் நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்நிலையில், மகாதேவன் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக லட்சக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பறக்கும் படை அதிகாரி வேதநாயகி, மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அதிரடியாக மகாதேவன் வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டனர். வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அதிகாரி வேதநாயகி, மகாதேவனிடம் விசாரணை நடத்தினார். அதற்கு அவர் மழுப்பலாக பதில் கூறினார். இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படை அதிகாரிகள், மகாதேவன் வீட்டில் சோதனையிட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மதியம் 2.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி ஷாய்ஷர்சிங் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். ஆனாலும் உயர் அதிகாரிகளின் உத்தரவு வரவில்லை எனக்கூறி மகாதேவன் வீட்டில் சோதனை செய்யாமலும் விசாரணை நடத்தாமலும் அதிகாரிகள் வெளியில் காத்திருந்தனர்.

பின்னர், மாலை 6 மணிக்கு உயர் அதிகாரிகளின் உத்தரவு கிடைத்துவிட்டதாக கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் மகாதேவன் வீட்டிற்குள் சென்று சோதனையை தொடங்கினர். அதிகாலை 3 மணி வரை சோதனை நடந்தது. இதுபோல் மகாதேவனுக்கு சொந்தமான செங்குன்றம் அருகே அலமாதியில் உள்ள மகாதேவி அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் மகாதேவனிடம் ஒரு லட்சத்து 98 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் ெசய்யப்பட்டது.

இதற்கான ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறிவிட்டு வருமான வரித்துறை, பறக்கும் படை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், “வருமான வரித்துறையினர் அதிமுக பிரமுகர் வீடு, அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சந்தேகம் உள்ளது. அமைச்சரின் தலையீடு காரணமாக இதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கலாம். 4 பெரிய பைகளில் வைத்திருந்த ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். சிறிய தொகையை பறிமுதல் செய்வதற்கு பல மணி நேரம் சோதனை செய்துள்ளனர். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றனர்.

Tags : minister ,cousin ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...