×

3 நாட்கள் டாஸ்மாக் மூடல் சரக்குகளை வாங்கி மூட்டை கட்டிய குடிமகன்கள் கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

குலசேகரம், ஏப். 17: தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படுவதால் குடிமகன்கள் சரக்குகளை போட்டி போட்டு வாங்கி மூட்டை கட்டினர். குமரி மாவட்டத்தில் மொத்தம் 144 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த சில நாட்களாக சரக்கு விற்பனை களைகட்டி காணப்பட்டது. குறிப்பாக பிரசாரம் முடிந்து திரும்புகின்றவர்கள் டாஸ்மாக் கடைகளை மொய்த்து வந்தனர். இந்த நிலையில் நாளை(ஏப்.18) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆகவே 3 நாட்களுக்கான சரக்குகளை மொத்தமாக வாங்கி வைக்க குடிமன்கள் மத்தியில் போட்டா போட்டி ஏற்பட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் இரவு 10 மணி வரையிலும் டாஸ்மாக் மற்றும் தனியார் பார்கள் குடிமகன்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மாலை 6 மணிக்கு மேல் பலரும் 3 நாட்களுக்கு தேவையான சரக்குகளை பைகளில் சிறு மூடை போல் கட்டி வாங்கி சென்றனர்.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் பெருங்கூட்டம் காணப்பட்டது. இதே போல்பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களும் இந்த 3 நாட்களும் அதிக வருமானம் பார்த்து விடுவார்கள். இவர்கள் டாஸ்மாக் சரக்குகளை சாக்கு மூட்டைகளில் வாங்கி சென்றனர். சில இடங்களில் சரக்கு வாங்க கூட்டம் அலைமோதியதால் ‘குடி’ மகன்களிடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. குலசேகரத்தை அடுத்த வள்ளியாற்று முகம் பகுதியில் ஒரே கட்டிடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றன. 2 கடைகள் இருந்தும் நேற்று மாலை முதல் கூட்டம் அலைமோதியது. சாலையின் இரு பக்கங்களிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிமகன்களின் பைக்குகள், சைக்கிள்கள், கார்கள் என்று வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப் பட்டு இருந்தன. இந்த நிலையில் மதுவிலக்கு போலீசார் ‘குடி’மகன்களை போன்று மாறுவேடத்தில் காத்திருந்து, பைகளில் மொத்தமாக சரக்கு வாங்கி செல்பவர்களை கையும், களவுமாக பிடித்து சென்றனர். இவ்வாறு சிலர் சிக்கினாலும் போலீசாரின் பிடியில் சிக்காமல் ஏராளமானோர் சரக்கு வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதி இரவு 10 மணி வரை பரபரப்புடன் இருந்தது.

களைகட்டிய கேரள மதுக்கடைகள்
தமிழகத்தில் 3 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மதுக்கடைகள் வழக்கம்போல இயங்குகின்றன. அங்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் களியக்காவிளை, பாறசாலை, நெடுமங்காடு போன்ற குமரி எல்லையோர மதுக்கடைகளில் கூட்டம் களைகட்டி வருகிறது. காலை 10 மணிக்கு கடை திறந்ததும் குமரி ‘குடி’மகன்கள் கடைகளை மொய்க்க தொடங்கியுள்ளனர். கூட்டம் அதிகம் வருவதால் நீண்ட வரிசையில் காத்து நின்று மதுவகைகளை வாங்கி செல்கின்றனர்.

ஒரே நாளில் ₹5.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை என்பதால் குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் மது வகைகள் அதிகமாக விற்பனையாகின. சராசரியாக நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ₹2.50 கோடிக்கு தான் மது வகைகள் விற்பனை இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் ₹5 கோடியே 20 லட்சத்து 92 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 14ம் தேதி ₹3 கோடியே 96 லட்சத்து 25 ஆயிரத்து 995க்கும், 13ம் தேதி ₹3 கோடியே 22 லட்சத்து 165க்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.


Tags : purchase ,shops ,cottages ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி