×

கள்ளக்குறிச்சி, ஆத்தூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

சின்னசேலம், ஏப். 17:   கள்ளக்குறிச்சி, ஆத்தூரில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வருவேன் என்று திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் கல்வராயன்மலை பின்தங்கிய பகுதியாகும். வேலைவாய்ப்பிற்கு வழியில்லை. அதனால் இங்கு அதிக அளவில் விளையும் மரவள்ளியை கொண்டு சேகோ பேக்டரி அமைக்க பாடுபடுவேன். அதை போல அதிக அளவில் விளையும் கடுக்காய்களை கொண்டும் கடுக்காய் தொழிற்சாலை அமைக்க பாடுபடுவேன். கல்வராயன்மலை, ஏற்காடு மலைகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா, நிலப்பட்டா கிடைக்க பாடுபடுவேன். மலைகிராமங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க பாடுபடுவேன். கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் ரிங்ரோடு அமைக்க பாடு
படுவேன். சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் திட்டம் துவக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் மந்த நிலையில் உள்ளது.

அந்த திட்டத்தை துரிதப்படுத்தி கள்ளக்குறிச்சிக்கு விரைவில் ரயில் வர பாடுபடுவேன். தமிழக அளவில் 2வது பெரிய சந்தையாக தலைவாசல் காய்கறி சந்தை உள்ளது. அதனால் காய்கறிகளை கெட்டு போகாமல் பாதுகாக்க தக்க இடத்தை தேர்வு செய்து குளிர்பதன கிடங்கு அமைக்க பாடுபடுவேன். அதைப்போல ஆத்தூரில் தற்போது குடிநீர் பிரச்னை உள்ளது. அதை முற்றிலுமாக போக்கிடும் வகையில் மேட்டூரிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆத்தூரில் குடிநீர் பிரச்னையை தீர்க்க பாடு படுவேன். அதைப்போல கள்ளக்குறிச்சி, ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் விபத்து போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை, சேலம் போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றனர். ஆகையால் கள்ளக்குறிச்சி, ஆத்தூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க பாடு
படுவேன். அதைப்போல கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் வேளாண்மைக்கல்லூரி அமைக்க பாடுபடுவேன்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு அரசு, தனியாரில் வேலைவாய்ப்பை பெற்றுத்தர பாடுபடுவேன். ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவதால் அவர்கள் தங்கி செல்ல குறைந்த கட்டணத்தில் அரசு கட்டமைப்பு வசதிகளை செய்வதுடன் சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற பாடுபடுவேன். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன் என்று உறுதி கூறினார்.

Tags : specialty hospital ,Athur ,Kallakurichi ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு...