×

தாவரவியல் பூங்காவில் புல் மைதானம் சீரமைப்பு பணி மும்முரம்

ஊட்டி, ஏப். 16:  அடுத்த மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், பெரிய புல் மைதானத்திற்கு நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.  கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மலர் கண்காட்சிக்கான பராமரிப்பு பணிகள் பூங்காவில் நடந்து வருகிறது. எனினும், பருவமழை பொய்த்த நிலையில் மலர்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், பேன்சி மற்றும் சால்வியா போன்ற மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூத்துள்ளன. கடந்த சில தினங்களாக பெரிய புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் விளையாடவும், அமரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் பெரிய புல் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மற்றும் உரங்கள் இடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை தொடர்ந்து பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 1ம் தேதி வரும் சுற்றுலா பயணிகளுக்காக பெரிய புல் மைதானம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் மீண்டும் மூடப்பட்டு மலர் கண்காட்சியின் போதே திறக்கப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : grass stadium ,botanical garden ,
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து ஊட்டி...