×

கட்டுமாவடி உள்பட கடலோர பகுதிகளில் ஓரா இன மீன் வரத்து குறைவு அழியும் நிலையில் உள்ளதா? மீனவர்கள் குழப்பம்

மணமேல்குடி, ஏப்.16:கட்டுமாவடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஓரா இன மீன்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளதால் அது அழியும் நிலையில் உள்ளதா? என்று காரணம் தெரியாமல் மீனவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.*பெரிய மீன் மார்க்கெட்:புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் மற்றும் நண்டு கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி  சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும்  மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து  வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும்.

ஓரா மீன்:முயல் போன்ற வாய் இருப்பதாலும், முழுக்க முழுக்க பாசிகளை இது தின்பதாலும் முயல்மீன் என்றும் இது அழைக்கப்படுகிறது. தமிழக தென் கடல் பகுதியில் இதன் பெயர் ஓரா.இது பகல் நடமாட்ட மீன். ஓரா மீன்களில் வெள்ளைப்புள்ளி உள்ள மீன், வரிக்கோடுகள் உள்ள மீன், பொன் வரி மீன், இரட்டைப் பட்டை மீன் என்று பல வகைகள் உள்ளன. ஒன்றிரண்டு ரக ஓரா மீன்களே ஓரடிக்கு மேலே வளரக்கூடியவை.முன்பெல்லாம் மீன் என்றாலே  செங்கனி,ஓரா என்று  இந்த இரண்டு மீன்களையும் சேர்த்து சொல்வார்கள். ஆனால் தற்போது இந்த ஓரா மீன் வரத்து மிகவும் குறைந்துள்ளது.  இந்த ஓரா மீன்கள் அதிகமாக நாட்டுப்படகு மீனவர்களின் மடி வலையில் மட்டுமே சிக்கும். தற்போது நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் எப்போதாவது ஒரு சில மீன்கள் மட்டுமே வருகின்றன. பல மாதங்களாக இதன் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சாதாரண ஓரா ஒரு மீன் 300 கிராம் முதல் 500 கிராம் வரை எடை இருக்கும். இது ஒரு கிலோ 110 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகும். இதேபோன்று மற்றொரு வகையான புள்ளி ஓரா ஒருமீன் 300 கிராம் முதல் ஒன்றரை கிலோ வரை எடை இருக்கும். இது ஒரு கிலோ 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகும். இந்த ஓரா மீன் ஏழைகளின் மீன் என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்த மீன் விலை குறைவாகவும், பார்ப்பதற்கு மிக அழகாகவும், சாப்பிட மிகவும் ருசியாகவும், சத்து நிறைந்ததாகவும், கெட்ட வாடை இல்லாமலும் இருக்கும்.

 தற்போது இந்த மீன் முழுவதுமாக அழியும் நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு நாளில் மீன்பிடி தடை காலம் தொடங்குவதால் அதன் பிறகாவது ஓரா  மீன்களின் வரத்து அதிகரிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த மீன்கள் அழியும் நிலைக்கு பல
காரணங்கள் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த மீனவ சங்க பிரதிநிதியும், கட்டுமாவடி கடல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவருமான பசுபதி கூறுகையில். “கடந்த இரண்டு வருடங்களாக ஓரா மீன்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்த ஓரா மீன்கள் ஆழம் குறைந்த பகுதியில் உள்ள பாசிகளில் வளரக்கூடியது. இந்த பாசிகள் மீன்களுக்கும், மனிதர்களுக்கும் பெரிதும் பயன்படுகிறது. இந்த பாசிகளை காயவைத்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படி ஏற்றுமதி செய்யப்படும் பாசிகள் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இதனால் இந்த பாசிகள் கடலோரப் பகுதிகளில் முழுவதுமாக அள்ளப்படுகின்றன.

குறிப்பாக கட்டுமாவடி பகுதிகளில் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் பாசிகள் அள்ளப்படுகின்றன.  இதனால் ஓரா மீன் இனங்கள் அழியும் தருவாயில் உள்ளது. இந்த நிலை இப்படியே போனால் வெகுவிரைவில் செங்கனி மற்றும் கடல் குதிரைகள் முற்றிலுமாக அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இறால் பண்ணை கழிவுகள் கடலில் கலப்பதாலும் மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. தண்ணீரின் மேற்பரப்பில் வாழக்கூடிய முரல் மற்றும் நெடுமுரல் மீன்களும் இறால் பண்ணை கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணமேல்குடி மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் விரைவில் இதுபற்றி ஆய்வு செய்வதாகவும் கூறியிருக்கின்றார்கள். என்று கூறினார். மேலும் கட்டுமாவடியில் உள்ள மீன் ஏலக்கடை உரிமையாளர் கூறும்போது, கட்டுமாவடி பகுதிகளில் சில மாதங்களாக ஓரா மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் சேதுபாவாசத்திரம் பகுதிகளிலுள்ள நாட்டுப்படகு மீனவர்களின் மடி வலைகளில் சிக்குவதால் குறைந்த அளவு ஓரா மீன்களே இங்கு விற்பனைக்கு வருகின்றன. இன்னும் ஒரு சில நாட்டு படகு மீனவர்கள்  மடி வலைக்குச் செல்லாமல்  பட்டி என்ற மீன்பிடி முறைக்கு மாறியதாலும் வரத்து குறைந்து இருப்பதாகவும்  கூறினார்.  எனவே இது போன்ற கடல் உயிரினங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : areas ,fishermen ,restoration ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...