மக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறேன்

நாமக்கல், ஏப்.16:  பொதுமக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று, பிரசாரத்தின் போது கொமதேக வேட்பாளர் சின்ராஜ் கூறினார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் சின்ராஜ் நேற்று திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன். பொதுமக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். லஞ்சம் வாங்க மாட்டேன்.

வெற்றி பெற்றால் தொகுதியில் உள்ள 14 லட்சம் மக்களுக்கும் நண்பனாக இருப்பேன். சிறு,குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். முல்லை பெரியாறு மற்றும் காவிரி ஆற்றில் மேகதாதுவில் புதிய அணைகள் கட்டும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும்,’ என கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ, திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மற்றும் கொமதேக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்று, சின்ராஜூக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

× RELATED உள்ளாட்சி தேர்தலை அரசியல் குறுக்கீடு இல்லாமல் நடத்த வேண்டும்