×

குடிநீர் பிரச்னையை தீர்க்காமல் டாஸ்மாக் கடையை திறக்க அரசு ஆர்வம் காட்டுகிறது

நாமக்கல், ஏப்.16: குடிநீர் பிரச்னையை தீர்க்காமல், அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அதிக ஆர்வம் காட்டுவதாக நாமக்கல்லில் மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல் தெரிவித்தார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் தங்கவேலுவை ஆதரித்து, நாமக்கல் பூங்கா சாலையில் மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் பேசியதாவது: தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அக்கறை காட்டாத அதிமுக அரசு, டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த அரசை அகற்ற வேண்டும். அதுவே, மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தல். இந்த தேர்தலில் மக்கள் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச்லைட்டுக்கு நீங்கள் வாக்களிக்கும் போது, அது சரியாக பதிவாகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

வேறு கட்சிக்கு பதிவானால், உடனடியாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து கையை எடுக்காமல், வாக்கு சாவடி அலுவலரை அழைத்து பிரச்னையை கூறவேண்டும். தேசத்தை நகர்த்தும் முக்கியமான இந்த தேர்தலில், அனைவரும் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட காவல்துறை போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் எனக்கு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி அளித்துள்ளது. அதற்காக காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இங்கு வந்துள்ள கூட்டமெல்லாம், நோட்டுக்காக வந்த கூட்டமல்ல. மக்கள் நீதி மய்யத்திற்கு ஓட்டு போட வந்த கூட்டமாக நான் பார்க்கிறேன். புதியதாக வாக்களிக்கும் இளைஞர்கள் வாக்கு சாவடியில் நேர்மையாக வாக்குப்பதிவு நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Government ,shop ,Tasmag ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி