×

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்

சிவகங்கை, ஏப்.16:  தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளதையடுத்து அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. சிவகங்கை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் எச்.ராஜா, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கவிஞர் சினேகன் உள்பட பல்வேறு கட்சியினர், அமைப்புகள், சுயேட்சைகள் என 26 பேர் போட்டியிடுகின்றனர். மார்ச்.10ல் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச்.19ல் தொடங்கி மார்ச்.26ம் தேதி வரை நடந்தது.

வேட்பு மனு பரிசீலனை மார்ச்.27ம் தேதியும், மார்ச்.29ல் மனு வாபஸ் பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்பு மனு தாக்கலுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், உதயநிதி ஸ்டாலின், பீட்டர் அல்போன்ஸ் என பல்வேறு தலைவர்கள் பிரச்சாரம் செய்து முடித்துள்ளனர்.

எச்.ராஜாவை ஆதரித்து பாஜக தலைவர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அமமுக இடையேயும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக இடையேயும் மட்டுமே போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சி வேட்பாளர்களுமே இரண்டு கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடந்து வந்த பிரச்சாரம் இன்று மாலை 6மணியுடன் நிறைவடைகிறது. மாலை 6மணிக்கு மேல் மைக் செட் கட்டி பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்துவது என எதுவும் செய்ய அனுமதி இல்லை.
கட்சியினர் அமைதியாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு கேட்க மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. கட்சியினர் கூறியதாவது: இத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு குறைவான நாட்களே இருந்தது. கடுமையான வெயிலும் அச்சுறுத்திய நிலையில் ஒரு வழியாக அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் செய்து முடித்துள்ளோம் என்றனர்.

Tags : Campaign ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...