×

கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருப்புத்தூர், ஏப். 16: திருப்புத்தூர் அருகே உள்ள கீரணிப்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நேற்று சித்திரைத் தேரோட்டம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச்.31ல் முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. ஏப்.7ல் 1ம் திருநாளன்று மாலையில் உற்சவ அம்பாள் இளையாத்தங்குடியிலிருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கீரணிப்பட்டிக்கு வந்தடைந்தது. பின்னர் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தினந்தோறும் அம்மன் வெள்ளி ரிஷப, அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் நடந்தது. 6ம் திருநாளன ஏப்.12ல் மாலையில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. 7ம் திருநாளான ஏப்.13ல் அம்மன் புஸ்ப பல்லாக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

9ம் திருநாளான நேற்று காலையில் முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணியளவில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மாலை 5.00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. இதில் கீரணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, இளையாத்தங்குடி, திருப்புத்தூர், சேவிணிப்பட்டி, கீழச்சிவல்பட்டி, செவ்வூர், குருவிக்கொண்டான்பட்டி, விராமதி, இரணியூர், முதலையான்பட்டி, சேத்தம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச்சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 10ம் திருநாளான இன்று செவ்வாய்கிழமை மாலை ஸ்ரீஉற்சவம்பாள் கீரணிப்பட்டியிலிருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் இளையாத்தங்குடிக்கு திரும்ப எழுந்தருளல் நடைபெறும்.

Tags : pilgrims ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்