×

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதி (தனி) மிளகாய் விவசாயத்திற்கு பெயர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதி (தனி) மிளகாய் விவசாயத்திற்கு பெயர் பெற்றது. மேலும், நெசவுத்தொழில், வைகை பாசன நிலங்கள் பரவலாக உள்ளன. இங்கு விளையும் மிளகாய்க்கு இந்திய அளவில் கிராக்கி உள்ளதால், ‘காரமான தொகுதி’ என பெயர் பெற்றுள்ள பரமக்குடியில் இம்முறை யார் வெல்வது என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. பரமக்குடியில் கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த முத்தையா 79,254 வாக்குகள் பெற்று முதலிடம், திசைவீரன் (திமுக) 67,865 வாக்குகள் பெற்று 2ம் இடம், பொன்.பாலகணபதி (பாஜ) 9,537 வாக்குகள் பெற்று 3ம் இடம், இருளன் (விடுதலைச்சிறுத்தைகள்) 3,780 வாக்குகள் பெற்று 4ம் இடம் பெற்றனர். இத்தொகுதியில் 2011ல் இங்கு வென்று அமைச்சரான சுந்தர்ராஜ் தொகுதியை கவனிக்காமலே, சென்னையில் இருந்தே காலத்தை ஓட்டி விட்டார் என தொண்டர்களிடம் கடும் அதிருப்தி கிளம்பியது. இதனாலே இவருக்கு பதிலாக கடந்த தேர்தலில் டாக்டர் முத்தையாவுக்கு அதிமுகவில் சீட் தரப்பட்டது. ஆனால், இவரும் டிடிவி அணிப்பக்கம் சென்று விட்டதால், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாகவே இத்தொகுதியில் அடிப்படை வசதிகள் அறவே நிறைவேற்றப்படவில்லை.
மேலும், அதிமுக இங்கு 7 முறை வென்றாலும், காட்டு பரமக்குடி முத்தையா கோவில் பகுதி வைகையாற்றில் இருந்து மஞ்சள்பட்டினம் பகுதிக்கு தரைப்பாலம், பரமக்குடி, எமனேஸ்வரத்தில் புதிய மேம்பாலம், சத்திரக்குடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டு விட்டது.

இம்முறை பரமக்குடிக்கு நடக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் சம்பத்குமார், அதிமுக சார்பில் சதன் பிரபாகர், அமமுக சார்பில் முத்தையா போட்டியிடுகின்றனர். கடந்த முறை அதிமுக பெற்ற வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை முத்தையா பிரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுக சார்பில் போட்டியிடும் சதன் பிரபாகர் முதுகுளத்தூர் தொகுதியை சேர்ந்தவர். திமுக வேட்பாளர் சம்பத்குமார் பரமக்குடி அருகே காவனூரை சேர்ந்தவர். உள்ளூரை சேர்ந்தவர் என்ற முறையில் இவருக்கு இம்முறை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இத்தொகுதியில் வைகையாற்று பாசனத்திற்கு உட்பட்ட 800 பாசன கண்மாய்கள் தூர்வாரப்படாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிவப்பு குண்டு மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு. அரசு தரப்பில் வர வேண்டிய நிலுவைத்தொகை மட்டுமே ரூ.50 கோடிக்கு பாக்கி உள்ளது. இதனால் நெசவுத்தொழிலாளர்கள் வேலையின்றி பரிதவிக்கின்றனர். இவர்கள் மாற்றுத்தொழில் தேடி அலைகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திமுக கொண்டுவந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக மட்டுமே பரமக்குடி தொகுதிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அதை முறையாக பராமரிப்பு செய்யாததால் பல இடங்களில் சாலை அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. வைகையாற்றையும் தூர்வார நடவடிக்கை எடுக்காததால் தண்ணீரின்றி உறைகிணறுகள் வற்றிய நிலையில் கிடக்கின்றன. இதனால் இத்தொகுதியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.கடந்த 7 ஆண்டுகளாக தொகுதிக்கு அதிமுக அரசு எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்ற கோபத்தில் மக்கள் உள்ளனர். இம்முறை கட்சிகள் இரண்டாக உடைந்தது, அமைச்சர் மணிகண்டன் மீதான அதிமுக தொண்டர்களின் அதிருப்தி ேபான்றவை திமுக வேட்பாளர் சம்பத்குமாருக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. மேலும், திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சாவிற்கு சொந்த ஊர் கமுதி என்பதால், இங்குள்ள பெருவாரியான வாக்குகள், பரமக்குடி கிழக்கு ஒன்றிய வாக்குகள் அதிகளவு திமுகவுக்கு விழும் வாய்ப்புகள் உள்ளன. காரமான தொகுதியில் மண்ணின் மைந்தரான திமுக வேட்பாளர், இம்முறை கோட்டைக்கு செல்வது உறுதி என தொகுதி மக்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

Tags : Ramanathapuram district ,assembly ,Paramankadi ,farm ,
× RELATED தொடர் மழையின்றி எள் விவசாயம் பாதிப்பு