×

வெயிலின் தாக்கத்தால் வெறிச்சோடிய காய்கறி சந்தை

ராமநாதபுரம், ஏப்.16: வெயில் கடுமையாக உள்ளதால் ராமநாதபுரம் காய்கறி சந்தைக்கு பொதுமக்களின் கூட்டம் குறைந்துள்ளது. ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சந்தை திடலில் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் காய்கறி சந்தை நடைபெறும். ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமானவர்கள் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருள்களை மொத்தமாகவும், தினசரி தேவைகளுக்காகவும் வாங்கி செல்வார்கள். சந்தைக்கு மதுரை, வத்தலக்குண்டு, தேனி, திண்டுக்கல் போன்ற ஊர்களிலிருந்து லாரிகளில் காய்கறி பழங்கள், விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

மீன்கள், கருவாடு மற்றும் பெண்களுக்கான ஆபரண பொருள்கள் என அனைத்தும் வாங்கலாம். காலை 7 மணி முதல் விற்பனை தொடங்கிய நிலையில் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும். ராமநாதபுரம் நகராட்சி வருடாந்திர குத்தகை அடிப்படையில் ஏலம் விடப்பட்டு இடம் வழங்கப்பட்டுள்ளது. சந்தைக்கான இடத்தில் கடையின் அளவை பொறுத்து ரூ.150 முதல் 400 வரை ஒரு நாள் வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. சுமார் 400 கடைகள் வரை வியாபாரம் நடைபெறும் என்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. சந்தை நாட்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் நடந்து செல்ல முடியாத அளவில் மக்கள் கூட்டம் அலை மோதும். கடுமையான வெயிலால் சந்தைக்கு மக்கள் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக வியாபாரம் சரியாக நடைபெறாத நிலையில் இடவாடகை, வண்டி வாடகை, கூலி போக முதலுக்கே வியாபாரம் நடக்கவில்லை என்பதால் கடைகளும் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை